Friday, February 26, 2010

உயர்த்தப்பட்ட கொள்முதல் விலை சிறு, குறு விவசாயிகளை சென்றடைகிறதா?











நாட்டில் மொத்தமுள்ள 60 கோடி விவசாயிகளில் சிறு, குறு விவசாயிகளின் எண்ணிக்கை 80 சதவீதமாகும்


புது தில்லி, பிப்.25: மத்திய அரசு அளிக்கும் உயர்த்தப்பட்ட கொள்முதல் விலைகள் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குச் சென்றடைகிறதா என பொருளாதார ஆய்வறிக்கை சந்தேகம் எழுப்பியுள்ளது.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு கொள்முதல் செய்யும் நெல்,கோதுமை, கரும்பு ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையைக் கணிசமாக உயர்த்தியது. இந்த பலன் சிறு, குறு விவசாயிகளைச் சென்றடைகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

5 ஹெக்டேருக்கும் குறைவான நிலப்பரப்பைக் கொண்ட விவசாயிகள் சிறு, குறு விவசாயிகளாகக் கருதப்படுகின்றனர். நாட்டில் மொத்தமுள்ள 60 கோடி விவசாயிகளில் இத்தகைய பிரிவினரின் எண்ணிக்கை 80 சதவீதமாகும்.

2004-05-ம் ஆண்டில் நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 560 வழங்கப்பட்டது. இது தற்போது ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டது.

இதேபோல கோதுமையின் கொள்முதல் விலை 72 சதவீதம் உயர்த்தப்பட்டு குவிண்டாலுக்கு ரூ. 1,100 வழங்கப்படுகிறது.

பருப்பு வகைகளின் கொள்முதல் விலையும் குவிண்டாலுக்கு ரூ. 1,350-லிருந்து ரூ. 2,300 ஆக 65 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பாசிப்பயிறு விலை குவிண்டால் ரூ. 1,410-லிருந்து 96 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ. 2,760 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உளுத்தம் பருப்பு குவிண்டாலுக்கு ரூ. 1,410-லிருந்து 79 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ. 2,520 வழங்கப்படுகிறது.

எண்ணெய் வித்துகளுக்கும் இதே அளவில் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சோயாபீன்ஸ், கடலை ஆகியவற்றின் கொள்முதல் விலை முறையே 50 சதவீதம் மற்றும் 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடுகு விலை கடந்த 5 ஆண்டுகளில் 8 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டும் ஒரு காரணம் என ஆய்வுக்குழு அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

விலைவாசி உயர்வு என்பது தவிர்க்க முடியாதது என்று சமீபத்தில் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதும் விலை உயர்வுக்குப் பிரதான காரணமாகும். பட்ஜெட்டுக்கு முந்தைய அறிக்கையில், கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதும் விலைவாசி உயர்வுக்குப் பிரதான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்காக விவசாயிகளுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகளின் பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கும் அதேசமயத்தில் நுகர்வோரின் நலனைக் காப்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்றும் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

நன்றி/தினமணி

No comments: