Saturday, January 3, 2009

திருடுபோகும் திருவண்ணாமலை - கவுத்தி, வேடியப்பன் மலைகளும் தீர்ந்து போகும் பொதுச்சொத்து வளங்களும்

(இரும்புதாது வெட்டியெடுக்கும் திட்டத்திற்கான கருத்து கேட்பு கூட்ட நிகழ்வுகளை பற்றி பகிர்வு)

திருவண்ணாமலை தீபதிருவிழா வருடந்தோறும் கார்த்திகை பௌர்ணமி தினத்தன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அருணாச்சலேஸ்வரரையும், தீபமே உருவான சிவனையும் வழிபட்டுவிட்டு ஜோதியேற்றப்படும் மலையினை சுற்றி சுமார் 14 கிலோமீட்டர் தூரம் நடந்தே கிரிவலம் ருவர்.

ஆண்டுதோறும் அதிகரித்துகொண்டே வரும் பக்தர்கள் கூட்டம், அனைத்து ஊடகங்களிலும் இவ்விழாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் நாம் அறிந்ததே.

நம்மில் பலர் அறிந்திடாத, தெரிந்திடாத, அல்லது கலாச்சார சீரழிவையும், விளம்பர வருவாயே தங்களது நோக்கங்களாக கொண்ட ஊடகங்களால் மற்றொரு மகாதீபம் உள்ளூர் மக்களால் ஏற்றப்பட்ட மற்றொரு மகாதீப நிகழ்வு ஒன்று மறைக்கப்பட்டுள்ளது. இந்த மாகதீபம் உள்ளூர் மக்களால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்தில் ஏற்றப்பட்டுள்ளது. ஆம் இத்தீபம் அண்ணாமலையார் தீபம் போன்று ஆண்டுக்கொருமுறை ஏற்றப்படுவதுமில்லை அத்தோடு அணைந்து போவதுமில்லை. அண்ணாமலையார் தீபம் எரிந்த 16ம் நாள் கழிந்து அதாவது கடந்த 2008 டிசம்பர் 27ம் தேதி உள்ளூர் மக்களால் ஏற்றப்பட்ட இந்த தீபம் " இந்தியாவிலுள்ள இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதரங்களையும் உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகளுக்கு விற்றுவிட்டு உள்ளூர் மக்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப்போடும் உலகமயகொள்கைகளுக்கும், அதன் ஏஜெண்டுகளான ன்மோகன் செட்டியார், சிதம்பரம் சிங்குகளின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத போக்குகளுக்கும் எதிராக திருவண்ணாமலை மக்கள் எழுப்பிய எழுச்சி தீபம்தான் இது.

வெற்று அறிக்கையும், ஆபாச வாக்குறுதிகளையும் அளித்துவிட்டு, அளித்து நாட்டிலுள்ள ஒட்டுமொத்த வாழ்வாதாரங்களை கண்மூடித்தனமாக அசூர வேகத்தில் சூறையாடி, இலாபமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் மக்கள் விரோத, இயற்கைக்கு துரோகமிழைக்கும் பகாசூர கம்பெனிகளுக்கும் அவற்றை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும்; கிஞ்சிற்றும் மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசாங்கத்தையும் இந்த மக்கள் தீபம் பொசுக்கும்.

இதனையும் மீறி எங்கெல்லாம் மக்கள் விரோத திட்டங்கள் முன்னெடுத்து செல்ல எத்தனிக்கப்படுகிறதோ! அல்லது செயல்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் இத்தீபம் நிச்சயம் கொழுந்து விட்டு எரியும். மக்களின் நெருப்பு வார்த்தைகளால் பிறப்பெடுத்து அவர் மரணங்களில் கூட முடியலாம். அப்போது கூட வியாபார ஊடகங்கள் வேறு ஏதேனும் குத்தாட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கலாம்.

ஆனால் எங்கள் மண், நீர், காற்று, இவற்றோடு மடிவேனே தவிர எள்ளளவும் விட்டுத்த மாட்டேன் என இந்த திருவண்ணாமலை மாவட்ட கவுத்திமலை, வேடியப்பன் மலையோர கிராமத்து மக்களின் உணர்வுகள் பதிவு செய்யப்படவேண்டியவை. இந்த கட்டுரை அவ் உணர்வுகளின், நெருப்புகனலில் சூடேற்றப்பட்டவனின் பார்வையில் உலக தமிழர்களின் பார்வைக்கும் சிந்தனைக்கும்.....

திருவண்ணாமலை - கவுத்திமலை, வேடியப்பன்மலை இரும்புத்தாது வெட்டியெடுக்கும் திட்டம்:

திருவண்ணமலை மாவட்டம் தமிழ்நாட்டில் வறட்சியாலும், எவ்வித தொழிற்சாலை வசதியும் இல்லாத விவசாயத்தை சார்ந்த பின்தங்கிய மாவட்டங்களில் கடைநிலையில் உள்ளதாகும். மக்கள் பெரும்பாலும் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களின் தெருவோரங்களையே தங்களது இல்லங்களாக கொண்ட இடம்பெயர்வு மக்களை பெற்ற "மகராசி" (மனித வளமுள்ள) மாவட்டம்தான் இது. இதுபோதாதென்று தற்போது இம்மக்களின் முக்கிய வாழ்வாதரமான கவுத்திமலை, வேடியப்பன்மலையினை இரும்புத்தாது வெட்டியெடுப்பதற்கு சுமார் 850 ஏக்கர் நிலத்தினை அரியானாவில் ஆரம்பிக்கப்பட்ட், மும்பையை தலைமையிடமாக கொண்ட சேலம் ஜின்டால் கம்பெனி (முன்பு சிஸ்கால்), தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழகம் (TIDCO) கூட்டு முயற்சியோடு நடைபெற்று வருகிறது.

இவ்விரு மலைப்பகுதியை சுற்றி சுமார் 16 கிராமங்கள் நேரடியாக இம்மலைகளை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்கின்றனர். பெரும்பாலும் நிலமற்ற ஏழை விவசாய கூலித்தொழிலாளர்கள், கணிசமான தாழ்த்தப்பட்ட வகுப்பினை சார்ந்த மக்கள் வசிக்கின்றனர்.

இந்நிலையில் தான் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமா இம்மலைகளில் இருந்து இரும்புதாது வெட்டியெடுக்கும் இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்தறியும் கூட்டத்திற்கு வழக்கம் போலவே வெகுஜன அடித்தட்டு மக்கள் எளிதில் படிக்கும் வண்ணம் ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் செய்திருந்தனர். தமிழ் தினசரிகளில் வெளியிட்டதாக கூறும் மாவட்ட நிர்வாகத்திற்கே எந்த நாளிதழ் என்ற விபரம் கடைசிவரை தெரியவில்லை. (அந்த திருவண்ணாமலையாருக்கே வெளிச்சம்)

காலை 11.30 மணிக்கு ஆரம்பித்த கருத்து கேட்பு கூட்டத்தில் செயல்திட்ட அறிக்கையினை மக்களுக்கு புரியாத புரியக்கூடாத மொ()ழியில் டிட்கோ இயக்குநர் சார்பாக தமிழ்நாடு அயன் ஓர் மைனிங் கார்ப்பரேஷன் லிமிடெட் அதிகாரி விளக்கி பேசினார். அவருடைய ஆங்கில மொழி விளக்கத்திற்கு முதல் எதிர்ப்பு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இருந்தே வந்தது.

தமிழில் பேசுகிறேன் பேர்வழி என ஏதோ திட்டத்தை பற்றி அவரது பேச்சு யாருக்குமே புரியவில்லை என்றுதான் நினைத்தேன். அது தவறு என்று பின்பு தான் உணர்ந்தேன்.

இரும்புத்தாது வெட்டி எடுக்கும் இக்கம்பெனி சுற்றுச்சூழலில் மிகவும் அக்கறையுடையது. பூமி சூடாதல், காலநிலை மாற்றம் குறித்து மிகுந்த அக்கறையுடைய நிறுவனம். சுற்றுச்சூழலை பாதுகாக்க அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி அல்கோர், காலநிலை மாற்றம் குறித்த ஆய்விற்கான நோபல் பரிசு பெற்ற இந்தியரான டெரி அமைப்பின் இயக்குநர் டாக்டர். பச்சவுரி ஆகியோருடன் இணைந்து தாங்கள் நிறுவனம் ஆற்றிவரும் பணிகள் குறித்து ஏகத்துக்கு எடுத்துவிட்டார். மறக்காமல் இத்திட்டம் ஆரம்பிக்கப்படும்பொழுது அப்பகுதியில் ஏராளமான சமுதாயப்பணிகளையும், வளர்ச்சித்திட்டங்களையும், கல்வி, சுகாதாரப்பணிகளையும் செய்வோம் என அரசியல்வாதிகளே பிச்சை வாங்கும் அளவிற்கு வாக்குறுதி அளித்துவிட்டு அப்பகுதி பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையும் பகுதியாக மாறும் என கூறி அமர்ந்தார்.

இத்திட்டம் குறித்து பொதுமக்கள் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. முதல் கேள்வியே மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இருந்து மன்னிக்கவும் முதல் நெருப்பே மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இருந்து தெரித்து வந்தது. அது, இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலம் னத்துறைக்கு சொந்தமானது தானே?. அதில் உள்ள மரங்கள் எத்தனை ? அதன் அளவு என்ன? என்றார் பொறுப்புள்ள மாவட்ட ஆட்சியர், அதற்கு அந்த அதிகாரி 2இலட்சம் மரங்கள் வெட்டப்பட உள்ளதாகவும், இந்த மரங்கள் இந்த தண்ணீர் பாட்டிலைப்போல இருமடங்கு உள்ளவை என கூறிய பதில் எரிகிற நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றுவது போல் இருந்தது.

அப்பகுதியில் வெட்டப்படும் மரங்களுக்கு முறையாக வனத்துறை அனுமதி பெறப்பட்டு அதற்கு ஈடாக (?) திருநெல்வேலி மாவட்டத்தில் 1,500 ஏக்கர் பரப்பளவில் மரம் நட்டு பசுமை வளையத்தை உருவாக்கி சுற்றுச்சூழலை பாதுகாக்க உள்ளதாக கூறி தங்கள் நிறுவனத்தில் சமூக பொறுப்பை பறைசாற்றினார்.

மக்களின் வாழ்வாதாரங்களை கெடுத்து, அழித்து, சுரண்டி கொள்ளையடித்து காசாக்கி விட்டு அதனை நம்பி வாழ்ந்த உள்ளூர் மக்களை அம்மண்ணிலேயே அகதியாக்கும் இந்த பன்னாட்டு பகாசுர கம்பெனிகள்தான் சுரங்கம் அமைய உள்ள கிராம மக்களின் நலனிலும், முன்னேற்றத்திலும், தன்னை சமூக அக்கறையுள்ளவர்களாக காட்டிக்கொள்ளும் கபடதாரிகள் எந்த கட்டுப்பாடற்ற முதலீடுகள் பூமி சூடாதல், காலநிலை மாற்றம் போன்ற இயற்கை பேரழிகளுக்கும் அதனால் ஏற்படும் தாக்கங்களுக்கு காரணமோ! அந்த சூத்திரதாரிகளே தங்களை பூமி சூட்டை தணிக்கும், குறைக்கும் ஆராய்ச்சியாளனாக, உதவுபவனாக, நாட்டுக்கும் ஏன் உலகிற்க்கே வழிகாட்டுபவனாக காட்டிக்கொள்ளும் குள்ளநரித்தனத்தில் அமெரிக்க வியாபாரிகளை விஞ்சிவிடுவர். இல்லையென்றால் திருவண்ணாமலையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வெட்டப்படும் 2இலட்சம் மரங்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் 1,500 எக்கர் நிலத்தில் மரம் வளர்க்க போவதாக மோடி வித்தை காட்டும் இவர்களை என்னவென்று சொல்வது. இத்திட்டத்திற்கு வனத்துறையிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது வேதனையிலும் வேதனை. வனங்களை பாதுகாப்பதற்குத்தான் வனத்துறை என நினைக்கும் அப்பாவி பொதுஜனங்களுக்கு வேண்டுமானல் இந்த செய்தி அதிர்ச்சி அளிக்கலாம். நாட்டிலுள்ள அத்தனை ஆதிவாசிகளும் ஒருமித்த குரலில் சொல்லும் ஒரே விசயம் வனத்துறை வனங்களையும், வன வளங்களையும் மொட்டை அடித்ததற்கு முழு பொறுப்பு ஏற்றாகவேண்டும், வனங்களை பாதுகாக்க வனங்களின் பூர்வகுடிகளான எங்களால் தான் முடியும் ன்று ஆணித்தரமாக கூறுகின்றனர். இதையே இந்திய அரசின் வனநில உரிமை அங்கீகார சட்டம் 2006ம் ஒப்புக்கொள்கிறது.

இனி மக்கள் அமைப்பு பிரதிநிதிகளிடம் இருந்த எரிந்த நெருப்பு தீபங்களில் ஒரு சில துளிகள்

இந்திராராஜன், திருவண்ணாமலை மாவட்ட எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர்:
தங்கள் அமைப்பு இத்திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றது. பாரம்பரிய நகரமான திருவண்ணாமலையில் ஏரளமான மூலிகைகளும், மரங்களும் அழிக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். திருவண்ணாமலை நகரில் உள்ள உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம், திருமண அரங்கு உரிமையாளர்கள் சங்கம், நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட 16 சங்கங்கள் சார்பாக இத்திட்டத்தை உடனே கைவிடக்கோரி கோரிக்கை மனுவினை பொதுமக்களின் ஏகோபித்த கரவொலிக்கு மத்தியில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

இராஜம்மாள், தலைவர் - தலித் பெண்கள் கூட்டமைப்பு:
வறட்சிக்கு பெயர்போன இம்மாவட்டத்தில் ஆயிரக்கனக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இம்மலைகளை அழிக்கும் முயற்சி இம்மக்களை உயிரோடு அழிப்பதற்கு சமமானது. ஏற்கெனவே வறட்சியின் கொடூரத்தால் இம்மாவட்ட ஆண்கள், குறிப்பாக குடும்ப தலைவர்கள் பிழைப்பிற்காக சென்னை, பெங்களூரு செல்வதால் இங்கு தனியாக குழந்தைகளுடன் வாழும் ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். இம்மாதிரியான இயற்கை வளங்களை அழிக்கும் செயலினால் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே அரசு இத்திட்டத்திற்கு கொடுத்துள்ள அனுமதியை திரும்பபெறவேண்டும் அதற்கு மாவட்ட ஆட்சியர் ஆவண செய்ய வேண்டும் என்றார்.

எஸ்.கே. விநாயகம் - தமிழ்நாடு சுற்றுச்சூழல் கழகம்

இரும்புத்தாது வெட்டியெடுக்கும் சுரங்கம் அமைக்கப்படுவதை பொதுமக்களுக்கு சரியாக தெரிவிக்கவில்லை. செய்திதாளில் ஏதோ ஒரு மூளையில் வெளியானதுதான் எங்களுக்கு தெரியும். அரசாங்கம் நடும் மரங்களே வளர்வது சிரமமாக உள்ள நிலையில், 2,00,000 மரங்களை வெட்டிவிடுவதாக கூறுவது நியாயமா?

நாங்கள் என்ன வேலை, வெட்டி இல்லாமல் இருக்கிறோம், எங்களுக்கு வேலை கொடுங்கள் என்று அழைத்தோமா? திருவண்ணாமலை நகரில் ஏற்கெனவே குடிதண்ணீர் பிரச்சனை. நீங்கள் டேமில் தண்ணீர் எடுத்தால் மக்கள் தண்ணீருக்கு சிரமப்படவேண்டியிருக்கும்.

மூலிகை மரங்களை அழித்துவிட்டீர்களானால், பவுர்ணமி தோறும் மலைவலம் வரும் மக்களின் கதி என்னாவது. பக்தர்களுக்கு நோய்கள் உண்டாகும். திருவண்ணாமலை வருகை குறையும் என்று கூறினார்.


திருவேங்கடம் - நிலைத்த வாழ்வாதாரத்திற்கான கூட்டுசெயல்பாடு (ஜாசூல்):
நாங்கள் இந்தியாவினுடைய வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இந்த வளர்ச்சி யாருக்காக? ஜின்டால் என்ற பன்னாட்டு கம்பெனிக்கா? அல்லது உள்ளூர் மக்களுக்கா? என்ற கேள்விக்கு விடைக்காண்பது அவசியம். இன்று இந்தியா முழுவதிலும் மக்களுடைய வாழ்வாதாரங்களையும், இயற்கையையும் சுரண்டி கொள்ளையடிக்கும் போக்கு அதிகரித்து கொண்டே வருகிறது. தனிப்பட்ட சில தொழிலதிபர்கள் பணம் பண்ணுவதற்கு மக்களுடைய வளங்களையும், வாழ்வாதாரங்களையும் அழிப்பது மனிதநேயத்திற்கு எதிரானது. அரசாங்கத்திற்கு இத்தகைய அதிகாரங்களை வழங்கியது யார்? . இந்த இரும்பு சுரங்கத்திற்கான செயல்திட்ட அறிக்கை முழுமையானதாக இல்லை. பொதுமக்களுக்கு இதைக்கூட முறையாக வழங்கவும் இல்லை. மேலும் இந்த சுற்றுச்சூழல் தாக்க துரித கணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்ட அறிக்கையை யார் தயாரித்தனர் என்ற விபரம் கூட இல்லை. மொத்தத்தில் இத்திட்டம் குறுக்கு வழியில் மக்களிடம் திணித்து மக்களை ஏமாற்றும் மோசடியான செயலாகும். 2 இலட்சம் மரங்களுக்கு மேல் வெட்டப்பட இருக்கின்றது. 1 எக்டேர் நிலத்தில் உள்ள மரங்கள் ஆண்டுக்கு 3.7 டன் கரியமில வாயுவை உட்கொண்டு 2 டன் ஆக்சிஜனை தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அப்படியானால் 325 எக்டேரில் உள்ள அடர்த்தியான காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் ஆபத்தினை அனைவரும் உணரவேண்டும். ஏற்கெனவே பூமி சூட்டினால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்கள் உலகத்தை அச்சுறுத்திக்கொண்டும் அழிவை உருவாக்கிக்கொண்டும் இருக்கின்றன. இத்தகைய தொழிற்சாலை அதன் வளர்ச்சி யாருக்கு? பாதிக்கப்படபோகும் திருவண்ணாமலை மக்களுக்கா? இல்லையே! எனவே மக்களுக்கு எதிரான இத்திட்டத்தை கைவிடும் வரை நாங்கள் கடுமையாக போராடுவோம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்:
திருவண்ணாமலை பாரம்பரிய நகரம். இத்திட்டம் செயல்பட இருக்கும் மலைப்பகுதியில் மான், முயல், எறும்பு தின்னி, மயில் உள்ளிட்ட ஏராளமான அரிகிவரும் கானூயிரினங்கள் உள்ளன. அரசாங்கம் ஏரளமான பணத்தை செலவழித்து வனஉயிரின சரணாலயம் அமைத்து வன உயிரினங்களை பாதுகாத்து உயிர்சூழலை பாதுகாக்கிறது. எனவே கானூயிர்களுக்கு அழிவு ஏற்படுத்தும் இத்திட்டத்தை கைவிட வேண்டும். இத்திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறோம்.

ஏழுமலை - பரமநந்தல்:
மாவட்ட ஆட்சியர் சுற்றுச்சூழல் நண்பர். அனைத்து இடங்களிலும் மரங்களை நடுபவர். மரம் வளர்ப்பதை உற்சாகப்படுத்துபவர். இங்கே அழிக்கப்படபோகும் 3 இலட்சத்திற்கும் அதிகமான மரங்களுக்கு பதிலாக திருநெல்வேலியில் மரங்கள் வளர்க்கப்படும் என கூறுவது திருவண்ணாமலை மக்களுக்கு திருநெல்வேலி அல்வா கொடுப்பதாகும். எங்களிடம் அது நடக்காது எங்கள் உயிரே போனாலும் ஒரு பிடி மண்ணை கூட அள்ள விடமாட்டோம்.

ஆதரவு தெரிவித்தவருக்கு அரங்கம் அதிர வைத்த எதிர்ப்பு:
கருத்து கேட்பு கூட்டத்தில் அனைவரும் திட்டத்திற்கு எதிராக பேச உள்ளூர் காங்கிரஸ் வக்கில் பிரமுகர் ஒருவர் ஏதோ இத்திட்டத்தை தங்களது காங்கிரஸ் கட்சியின் சாதனை என்பது போல பேச ஆரம்பிக்க சுமார் 800க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றாக சேர்ந்து அவரை பேசவிடாமல் "கைக்கூலி, துரோகி" என கூச்சலிட்டு அவரை பேசவிடாமல் தடுத்தனர். இது சாதாரண காங்கிரஸ் பிரமுகருக்கு எதிரான கொந்தளிப்பு அல்ல ஒட்டுமொத்த உலகமயகொள்கைக்கு, அதனை தாங்கிப்பிடிக்கும் உலகவங்கியின் எடுபிடிகளான (முன்னாள் வேலைக்காரர்கள்) மன்மோகன், சிதம்பரங்களுக்கு அவர்களை தாங்கிப்பிடிக்கும் நேரு குடும்பத்தின் கொத்தடிமை அமைப்பான காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கொந்தளிப்பாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது.

ஜனநாயகம் காத்த மாவட்ட ஆட்சியர்:
திட்டத்தை எதிர்த்து பேச உங்களுக்கு உரிமை உள்ளது போல ஆதரித்து பேச அவருக்கு உரிமையுள்ளது. எதிர்த்து பேசுபவர்களுக்கு எவ்வளவு கைதட்டல் உள்ளது ஆதரவாக பேசும் இவருக்கு எவ்வளவு கைதட்டல் கிடைக்கப்போகிறது என்பதிலிருந்து நான் புரிந்துகொள்வேன் என்று அவர்கூற; இருந்தும் கடைசிவரை கம்பெனிக்கு ஆதரவாக அந்த காங்கிரஸ் வக்கிலால் மக்கள் நீதிமன்றத்தில் வாதாட முடியாமல் போனது பரிதாபம்.

இங்கேயும் விடுதலை சிறுத்தைகள் விட்டு வைக்கவில்லை:
ஏற்கெனவே இயக்குநர் சீமான் கைது, சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்டது என கதர் கட்சிக்கு சிறுத்தைகளுக்கும் இடையே பற்றியெரியும் விவகாரங்களுக்கிடையே அடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் பேச வந்தனர், எடுத்த எடுப்பிலேயே " காங்கிரஸ் எப்பவுமோ மக்களுக்கு விரோதமான வேலைகளைத்தான் செய்வர், பேசுவர் என தொடங்க அங்கே இருகட்சி மோதலுக்கான சூழ்நிலையாக மாறியது.

இந்த சண்டை முடியும்போது சேலம் கஞ்சமலை பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பாளர், கருத்து கணிப்பை வீடியோ பதிவு செய்த நபரை மாவட்ட தகவல் தொடர்பு அலுவலர் அரங்கத்திற்கு உள்ளேயே கடுமையாக மிரட்டி தரதரவென சட்டையை பிடித்து இழுத்து சென்றார், அந்த நண்பரை காவல்துறை ஆய்வாளர் ஒருவர் கடுமையாக மிரட்டுவதாக புகார் எழுப்பினார். அதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர், நீங்கள் யார்? எந்த ஊர்? இது எங்க மாவட்ட பிரச்சனை எங்களுக்கு தெரியும் உங்க வேலையை பார்த்துட்டு போ! என தன் பங்குக்கு அன்பாக மிரட்டினார். அதற்கு கஞ்சமலை நண்பர், ஏன் கலெக்டர்! உங்க மாவட்ட பிரச்சனையை நீங்கதான் பேசனும்னு ஏதாவது சட்டம் இருக்கா? அப்படி எதாச்சும் இருந்துச்சுண்ணா ஏன் சேலம் ஜின்டால் கம்பெனிக்காரனை உங்க மாவட்ட மலையை நோண்ட விடுறீங்க. அவன் வேற மாவட்டத்துகாரன் மட்டுமில்ல வேற மாநிலத்துகாரனும் கூட. அவன முதல்லேயே தடுத்து நிறுத்தியிருக்கலாம்ல. இந்த கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லயே? உங்களுக்கு ஒரு நியாயம்? ஊருக்கு ஒரு நியாயமா?

அனைவரையும் அசத்திய 85 வயது மூதாட்டி:
இத்திட்டத்தை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது வறட்சியான காலங்களில் கவுத்திமலை, வேடியப்பன் மலையில் காய்ந்த மரங்களை வெட்டியே வயிறு கழுவியதாக கூறினார். உடனே ஆவேசமடைந்த சுமார் 85 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மைக் இல்லாமலேயே ஆவேசமாக பேசினார்.

எங்கமலை இந்தமலை. எங்க ஊரே மழை, தண்ணி இல்லாம மக்கள் எல்லாம் வேலை வெட்டி இல்லாம குடிக்க கஞ்சி இல்லாம இருந்தபோது காய்ஞ்ச மரங்களை வெட்டி 4 மைல் தூரம் நடந்தே திருவண்ணாமலை டவுனுக்கு நடந்து வந்து விறகு வித்து அரிசி வாங்கி சமைச்சி என் பிள்ளைகளை காப்பாத்தி இருக்கேன். அன்னைக்கு கூட நாங்க பச்ச மரத்த வெட்டினதுகிடையாது. ஆனா நீங்க சம்பாதிக்க பச்சமரத்தையும், வெட்டிப்புட்டு மலையையும் அள்ளப்போறிங்களா. உங்களால இன்னொரு மலையை உருவாக்க முடியுமா? எங்க உசுரு போனாலும் இதை தடுத்து நிறுத்துவோம் என ஆவேசத்தில் உணர்ச்சி பிளம்பாய் வெடிக்க அனைவரும் அதிர்ந்து போனார்கள் கலெக்டர் உட்பட.

இக்கருத்துகணிப்பு கூட்டத்திற்கு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவில்லையென்றபோதிலும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஏரளமானோர் வந்திருந்தனர். இவர்களில் ஒரு உறுப்பினர் கருத்து கேட்பு கூட்டத்தில் ஜின்டால் கம்பெனி இரும்புத்தாது கம்பெனி திட்டத்தை ஆதரித்து பேச தனக்கு பணம் தர முற்பட்டதாக பகீர் வாக்குமூலம் தந்தார். தெரிந்தோ தெரியாமலோ மக்கள் அவரது கூற்றை அசட்டைகூட செய்யவில்லை. மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கம்பெனிகளால் உள்ளூர் தலைவர்களை கூட விலைக்கு வாங்க முடியாததது ஆச்சரியம்தான். ஜின்டால் கம்பெனி கூடங்குளம் அணுமின்நிலைய அதிகாரிகளிடம் உள்ளூர் தலைவர்களை எப்படி விலைக்கு வாங்குவது என்பது பற்றி ஆலோசனை கேட்டிருக்கலாம். நல்லவேலை மக்கள் தப்பித்தார்கள். நல்லதே நடக்கும் என நம்புவோம்.

சுரங்கவெடி வேடியப்பனை அழிக்கவா?:
கருத்துகேட்பு கூட்டம் துவங்கும்போது சுரங்கப்பணி ஆரம்பிக்கும்போது சுகாதாரம், கல்வி, அடிப்படை வசதிகள் செய்து தருவதில் முன்னிற்போம் என கூறியபோது மக்கள் சரியான பதிலடி கொடுத்தனர். “சோழியன் குடுமி சும்மா ஆடாது! எங்க அரசாங்கம் பள்ளிக்கூடம், ரோடு, ஆஸ்பத்திரி கட்டி தந்திருக்கு!. நீங்க கட்டி ஒண்ணும் புடுங்க வேண்டாம். நீங்க விடுற கதையெல்லாம் அழுத பிள்ளை கையில மிட்டாய குடுத்திட்டு கழுத்துல கிடந்த தங்க செயினை கழவாண்ட கதைதான். 180 பேர் என்ன நீங்க 1800 பேருக்கு வேலை கொடுத்தாலும் எங்களுக்கு வேண்டாம் இந்த திட்டம். எங்களை நோயை உருவாக்கி விட்டு ஆஸ்பத்திரி கட்டி சிகிச்சை தரப்போறிங்களா. "நீங்க என்னய்யா ஆஸ்பத்திரி கட்டித்தர்ரது, எங்க வேடியப்பன் தீர்த்தம் குடிச்சா எந்த நோயும் பஞ்சா பறந்து போகும்யா" அந்த வேடியப்பன் இல்லன்ன நாங்க இல்லைய்யா. நோய் தீர்க்கும் அந்த வேடியப்பனை வெடிவைத்து அழிக்கபோகிறதா இந்த கம்பெனி.

கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் மக்கள் அனைவரும் ஏகத்திற்கும் மாவட்ட ஆட்சித்தலைவரை புகழ்ந்து(!) அவர் திட்டத்தை அனுமதிக்கமாட்டார் என சொல்லிவைத்தார் போல கூற கலெக்டரும் தன் பங்கிற்கு வேடியப்பன் கோயில் வரலாற்றை கூறினார். அப்பகுதியில் வாழ்ந்த உங்களுடைய முன்னோர் வழிவந்த தெய்வமே வேடியப்பன். அவனே அப்பகுதி மக்களை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் ஏராளமான மக்கள் இன்றும் தீர்த்தம் குடிப்பது போன்ற வழிபாட்டு சடங்குகள் நடைபெறுவதாக எடுத்து கூறினார்.

இரும்புத்தாது பிரித்தெடுக்க உறிஞ்சப்படும் மக்களின் குடிநீர்:
திருவண்ணாமலை மாவட்டம் ஏற்கெனவே வறட்சியான மாவட்டம். இச்சுரங்கத்திற்காக, தாதுப்பொருளை பிரித்தெடுக்க நாளோன்றுக்கு சுமார் 560 கன மீட்டர் நீர் தேவைப்படும். இதற்காக 25கி.மீ தூரமுள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணைக்கட்டிலிருந்து பெரிய ஆள்துளை கிணற்றின் மூலம் உறிஞ்சப்படும். திருவண்ணாமலை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் ஒட்டுமொத்தமான குடிநீர் ஆதாரமே அழிக்கப்பட்டுவிடும். ஆனால் இவ்விவரங்கள் படுசாமர்த்தியமாக இவ்விவரங்கள் எதையும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் மறைக்கப்பட்டுள்ளது. ஆக இத்திட்டத்தினால் கவுத்திமலை, வேடியப்பன் மலையோர கிராமங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக திருவண்ணாமலை மாவட்ட மக்களின் வாழ்வாதரமே கேள்விக்குள்ளாகிவிடும் வாய்ப்புள்ளாகிவிடும் வாய்ப்புள்ளது. மேலும் கழிவுநீர் உயரமான மலைப்பகுதியிலேயே நிலைநிறுத்தப்படுவதால் சுற்றியிருக்கும் நிலத்தடிநீர் மாசுபடாதா? மேலும் வெள்ளப்பெருக்கு காலத்தில் மழைத்தண்ணீரோடு கழிவு தண்ணீரும் கலந்து மலையடிவாரத்தில் உள்ள எங்களது நிலம் பொட்டல் காடாகவும், வனாந்தரமாகவும், வாழ்வதற்கு தகுதியில்லாததாகிவிடும் என்ற ஆரம்ப கல்வி கூட தாண்டாத அப்பாவி இளைஞனின் குரலில் உள்ள ஆதங்கம் மக்களை கலங்க வைத்தது.

எத்தனை சிற்றோடை, நீர் ஊற்று, சுற்றுப்புற பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்கு காரணம் இம்மலையும், வெட்டப்படப்போவதாக கூறப்படும் மரங்களுமே என்று இந்த சுயநல கும்பலுக்கு உரைக்காமல் போனது ஏனோ?.

தண்ணீரையும், மணலையும், மண்ணையும், மலையையும் விற்றுவிட்டோம். இனி அதிக லாபம் தரும் தொழில் " பிராண வாயு பை வியாபாரம்" தான் என்றுணர்ந்து அதற்கான முஸ்தீபுகளில் இறங்கி விட்டனர் என்பதை நினைத்து நெஞ்சு பதைபதைக்கிறது.

வனத்துறையின் வஞ்சகம்:
சட்டங்களையும், விதிகளையும் புறந்தள்ளி மக்கள் நலன்களை துச்சமென நினைக்கும் அரசாங்கம், உள், வெளிநாட்டு பணமுதலைகளுக்கு சாதகம் காட்டும் ஒருமுகம்தான் திருவண்ணாமலை கவுத்திமலை, வேடியப்பன் மலை இரும்புத்தாதுசுரங்கத்திட்டம். இதற்கு பரிசு தான் 850 ஏக்கர். ஆனால் மண்ணின் மைந்தர்கள், பூர்வகுடி மக்கள், ஆண்டாண்டு காலமாக சமுகத்தின் பலநிலைகளில் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களான ஆதிவாசி மக்களின் வாழ்வாதார, ஜீவாதார, கலாச்சார உரிமைகளுக்காக நிறைவேற்றப்பட்ட ஆதிவாசிகள் மற்றும் வனங்களை சார்ந்து வாழ்வோருக்கான வனநில அங்கீகார சட்டம் 2006, பாதிக்கப்பட்ட இம்மக்களின் நிலங்களையும், சமூக உரிமைகளையும் உறுதி செய்யும் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தும் இதுகாறும் ஒருபிடி காணி நிலம் கூட இம்மக்களுக்கு வழங்கப்படவில்லை. ஏன் அதற்கான சிறு துறும்பைக்கூட கிள்ளி போடவில்லை இந்த 'மக்கள் நல அரசாங்கம்'. ஆதிவாசி மக்களால் இந்த வனங்கள், வன உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதே வரலாறு. வனத்துறையை போல வனங்களை அழித்ததாக, விற்றதாக வரலாறு இல்லை. இன்று இரும்புத்தாது சுரங்கத்திற்கு அனுமதி என்ற பெயரில் வனத்தை வெட்டியெடுக்க, வனஉயிர்களை காவுகொள்ள அனுமதியளித்துள்ள வனத்துறையை என்னவென்று சொல்வது.

ஆனாலும் திருவண்ணாமலை கவுத்திமலை, வேடியப்பன்மலை இரும்புத்தாது சுரங்க திட்டத்திற்கு எதிராக மக்களை தட்டியெழுப்பி ஒருங்கிணைத்த சுற்றுச்சூழல் அமைப்பினர் குறிப்பாக நிலைத்த வாழ்வாதாரத்திற்கான கூட்டு செயல்பாடு - திருவண்ணாமலை மாவட்ட குழு, சேலம் கஞ்சமலை மீட்பு போராட்டக்குழு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் கழகம், பெண்கள் இணைப்புக்குழு, தலித் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பஞ்சமி நிலமீட்பு இயக்கம், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் போன்ற மக்கள் அமைப்புகளின் பணி மகத்தானது.

இறுதியாக கருத்து கணிப்பு கூட்டத்தை முடித்துவைக்கும் விதமாக பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். உங்களுடைய ஆதங்கம், கோபம், எனக்கு புரிகிறது. இவ்வளவு எதிர்ப்புகளுக்கிடையில் இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது. அரசாங்கத்திற்கு இத்திட்டம் அமைத்தே தீரவேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. மக்கள் சக்தியை மீறி அரசாங்கம் எதுவும் செய்திடமுடியாது. ஆனாலும் உங்கள் கருத்துக்களை மத்திய அரசிடம் தெரிவித்து ஜின்டால் இரும்புகம்பெனியிடம் கேட்டு முடிவு எடுக்கப்படும். ஏற்கெனவே இதற்கான உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. அவற்றின் நடைமுறைகள் படி செயல்பட வேண்டி உள்ளது. ஆகவே நீங்கள் உறுதியாக நம்பலாம் இந்த திட்டம் உங்கள் எதிர்ப்பை மீறி வராது. நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என உறுதியளித்தார்.

கிட்டத்தட்ட 3 மணிநேரம் உணர்ச்சிகளின் தீக்கனலாய் சுழன்ற கருத்தாய்வு கூட்டத்தில் அனைத்து தரப்பினரின் குரல்களையும் பொறுமையாகவும், நிதானமாகவும், முழுமையாக ஒலிக்கசெய்திட்ட மாவட்ட ஆட்சியர் இராஜேந்திரன் பணியை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும்.

ஆக்கம்:
தனராஜ், ஆதிவாசிகளுக்கான சமூகசெயல்பாட்டாளர்,
மதுரை


மேற்கொண்டு தகவலுக்கு:
1.2007 டிசம்பர் 04 அன்று சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி அவர்களின் பேட்டி: http://www.maalaisudar.com/newsindex.php?id=5721%20&%20section=19
2.அரசு - தனியார் கூட்டு திட்டம் என்பதை சொல்லும் டிட்கோ தகவல் - http://www.tidco.com/iron.html -
3.ஜின்டால் கம்பெனி வலைத்தளம் - http://www.jsw.in/index.asp
4.சுற்றுச்சூழல் தாக்க துரித கணிப்பு அறிக்கை மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத்திட்டம் அறிக்கை: http://www.tnpcb.gov.in/pdf/tn_iron_ore.pdf
5.மக்கள் கருத்தறியும் கூட்டம் பற்றிய ஹிந்து பத்திரிக்கை செய்தி: http://www.hindu.com/2008/12/27/stories/2008122752590300.htm
6.கருத்துகணிப்பு கூட்டத்தில் மக்களின் ஆவேசம் பற்றிய தினத்தந்தி செய்தி: http://www.dailythanthi.com/article.asp?NewsID=459392&disdate=12/28/2008&advt=2
7.மக்கள் சக்திக்கு வெற்றி என்ற தலைப்பிலான திணமணி தலையங்கம்: http://www.dinamani.com/epaper/epapermain.aspx