Saturday, December 20, 2008

நிஷா புயல் மற்றும் தொடர் வெள்ளச்சேதம் பற்றிய ஜாசூல் ஆய்வு குழு அறிக்கை

தமிழகத்தில் நிஷா புயலின் தாக்கம்:

'நிஷா' பெயர் என்னவோ அழகுதான். ஆனால் அழகான பெயரிடப்பட்ட இந்த புயல் கடந்த 20 நாட்களாக டெல்டா மாவட்ட மக்களை படுத்தியபாடு தான் சொல்லிமாளது. நிஷா புயலால் டெல்டா மாவட்ட மக்கள், விவசாயிகள் பட்ட வேதனைகள். வலிகள், கஷ்டங்கள், நஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பாதிப்பில் இருந்து விடுபடவே இன்னும் 2 மாதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்பட 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 20 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் அனைத்து சாகுபடிகளும் முற்றாக அழிந்து விவசாயிகள் வேதனையில் வாடுகின்றனர்.

த‌மிழக அரசின் வெள்ள நிவாரணப் பணிகளை கண்காணித்தல் மற்றும் துரிதப்படுத்துவதற்கான அமைச்சரவைத் துணைக்குழு அறிக்கைப்படி, இதுவரை (6 டிசம்பர் 2008) வெள்ளத்தால் 189 பேர் இறந்துள்ளதாகவும், 4,997 கால்நடைகள் உயிர் இழந்துள்ளதாகவும், 5,06,675 குடிசைகள் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 4,93,970 குடிசைகள் பகுதியாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 1,597 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மாநில நெடுஞ்சாலைகளில் 2062 கிலோ மீட்டர் சாலைகள் வெகுவாக பாதிப்புக்குள்ளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகள் 383 கி.மீ. தூரம் பழுதடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பொதுப்பணித்துறை மூலம் பராமரிப்பிலுள்ள கண்மாய்களைப் பொறுத்தவரையில் 1,957 சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 7,72,327 எக்டேர் பரப்பளவில் பயிர்க‌ள் நீரில் மூழ்கியு‌ள்ளன.

வெ‌ள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்க‌ள் தங்குவற்கு ஆரம்பத்தில் 1,327 நிவாரண முகாம்க‌ள் துவக்கப்பட்டது, அவற்றில் 8,80,897 நபர்க‌ள் தங்கியிருந்தனர். தற்போது 595 வெள்ள நிவாரண முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும், இவைகளில் 43 முகாம் காஞ்சி மாவட்டத்திலும், 47 முகாம் நாகை மாவட்டத்திலும், தஞ்சை, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு முகாம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் 502 முகாம்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இம்முகாம்களில், 3,23,615 நபர்கள் தற்போது தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஜாசூல் கள ஆய்வு:

12க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ளச்சேதம் ஏற்பட்டிருந்தாலும் பெருத்த சேதத்தை சந்தித்தவை டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களாகும். இவற்றில் திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட ஜாசூல் அமைப்புகளின் கோரிக்கைகளின் பேரில் மாநில அமைப்பாளர் திரு. ஒய். டேவிட் அவர்களின் ஆலோசனைப்படி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. மாரிராஜன் அவர்கள் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் திரு. சரவணன் மற்றும் கடலூர் மண்டல அமைப்பாளர் திரு. ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய ஆய்வு குழு திருத்துறைப்பூண்டி, கடலூர், சிதம்பரம், காட்டுமண்ணார்கோவில், மற்றும் சேத்தியாதோப்பு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த டிசம்பர் 12 – 15 வரை பார்வையிட்டு அறிக்கை தயார் செய்தது.

திருவாரூர் மாவட்டத்தில் நிஷா புயலின் தாக்கம்:

தமிழகத்தில் இந்த புயல் கடற்கரை ஓரம் உள்ள 12 மாவட்டங்களை தாக்கினாலும் கூட அவற்றில் முதன்மையான பாதிப்பு ஏற்பட்டது திருவாரூர் மாவட்டத்திற்குதான். ஏழை, பணக்காரன் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி தாக்கிய நிஷா புயலால் ஏற்பட்ட ஒட்டுமொத்த சேத மதிப்பு 720 கோடி ரூபாய் என மாவட்ட நிர்வாகம் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதில் முதற்கட்ட நிவாரணத்திற்கென 215 கோடி ரூபாய் தேவை என அரசிடம் கோரப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் வயலில் பயிரிடப்பட்டிருந்த பகுதிகள் அழுகிப்போய் உள்ளன. இதனால் நல்லவிளைச்சல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகள் தற்போது அரசின் நிவாரண உதவியை எதிர்நோக்கியுள்ளனர்.

நிஷா புயலால் மாவட்டம் முழுவதும் இதுவரை573வருவாய்கிராமங்களில் உள்ள 30 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. பல பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் முழுமையாக வடியாததால் சேததிப்பு அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. 2 ஆயிரத்திற்கும் அதிகமான கால்நடைகள் பலியானதுடன் பொதுமக்களில் 120 பேர் பலியாகியுள்ளதாக வருவாய்த்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருத்துறைப்பூண்டி, முத்துப்போட்டை, கோட்டூர் ஆகிய பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் முழுமையாக வடியாததால் பாதிக்கப்பட்டுள்ள 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் 220 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் (டிசம்பர் 12 வரை). இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு மற்றும் மருத்துவ வசதி செய்து தரப்பட்டு வருகிறது.

மாவட்ட அளவிலான பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்:

1. தொலைந்த இயல்பு வாழ்க்கை: கடந்த 10ம் தேதி டில்லியில் இருந்து வந்த மத்திய குழு திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியது. பல பகுதிகளுக்கு காரில் சென்று மக்களை சந்தித்து குறைகள் கேட்ட குழுவினர் திருத்துறைப்பூண்டி வரும்வழியில் வெள்ள நீரால் சூழப்பட்டு கடந்த 20 நாட்களாக வெளியே வரமுடியாமல் தவித்த ஓவர்குடி கிராமத்திற்கு படகு மூலம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். வெள்ளப்பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து விரைவில் உரிய நிவாரணம் பெற்றுத்தர முயற்சிப்பதாக அவர்களிடம் கூறினர். அதிகாரிகளின் ஒற்றை வரி பதில் தற்போதைய மக்களுக்கு ஓரளவு ஆறுதலை கொடுத்தாலும் இன்னும் வெள்ள நீர் வடியாத பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை தொலைத்து விட்டு விரக்தியின் விளிம்பில் நிற்கும் அவலம் உள்ளது.

2. குடிலாக மாறிய சாலைகள்: மாவட்டத்தின் முத்துப்போட்டை, திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள பலகிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளநீர் இன்னமும் வடியாத முத்துப்போட்டை சாலையில் கல்லிக்குடி, பாண்டி குன்னூர், வடகாடு ஆகிய பகுதிகளில் சுமார் 100க்கும் அதிகமான குடும்பத்தினர் ரோடுகளின் ஓரத்தில் கீற்றுக்கொட்டகை, பாலீத்தீன் சாக்குகளை வைத்து தற்காலிக குடில் அமைத்து தங்கியுள்ளனர். பாம்பு மற்றும் விஷப்பூச்சிகளின் தாக்குதல், அவ்வப்போது திடீர் திடீர் என பெய்து மிரட்டும் மழை என குடிலில் தங்கியுள்ளோர் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதேபோல் இப்பகுதியில் உள்ள கடம்ப விளாகம், எக்கல், வினோபா கிராமம், பண்ணைபொது ஆகியவை உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளநீரல் சூழப்பட்டு கடந்த 20 நாட்களாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

3. அரிசி மட்டும் தர்றாங்க: ஓவரூரை சேர்ந்த செல்வி கூறுகையில், தற்போது அரசு தரப்பில் நிவாரண பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை, அரிசி மட்டுமே கொடுக்கப்படும் நிலையில் மளிகைப்பொருட்கள் வழங்கப்படுவதில்லை என புகார் தெரிவித்தார்.

4. வடியாத வெள்ளநீரால் மக்கள் தவிக்கும் நிலை: ஏன் இந்த அவலம்?: ஓவர்குடி பஞ்சாயத்து தலைவர் சேகர் கூறுகையில், மரக்கா கோரையாறு, சால்வனாறு பகுதிகளில் ஏற்பட்ட அதிகப்படியான உடைப்புகளால் தான் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டது. மேலூம் கிழக்கு கடற்கரை சாலை அமைக்கும்போது பழைய பாலங்களை எடுத்துவிட்டு பெரிய அளவிலான தரமான பாலங்களை போட்டிருந்தால் வெள்ள நீர் விரைவில் வடிந்து இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. தற்போழுது கிழக்கு கடற்கரை சாலையால் தான் இவ்வளவு பாதிப்பு.

5. டெல்டா பகுதியில் தூர்வாருதல்: கண்துடைப்பு நாடகம்: டெல்டா பகுதிகளில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், முகத்துவாரங்களை சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முழுமையாக தூர்வாரினால் இத்தகைய இழப்புகளை தவிர்க்கலாம் என இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர். ஆனால் அரசு ஒவ்வொரு ஆண்டும் கண்துடைப்பாக சில கோடி ரூபாய்களை மட்டுமே ஒதுக்கி வருகிறது. இதனால்தான் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் திடீர் வெள்ளம் ஏற்படுவதும் பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்ற பெயரில் பல கோடி ரூபாயை வாரி வழங்குவதும் வாடிக்கையான செயலாக மாறிவருகிறது. எனவே தமிழக டெல்டா பகுதியில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதுடன், ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டுவதுதான் இதற்கு நிரந்தரமான தீர்வாகும்.

6. மழை வெள்ளத்தால் பயிர்கள், குடிசைகள் பாதிப்பு: வைக்கோல், கீற்றூக்கு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு: மழைவெள்ளத்தால் பயிர்களும் குடிசைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், வைக்கோல் மற்றும் கீற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் அரசிடம் இருந்து ரூ. 2000 நிவாரணம் பெற்றுள்ள மக்கள் தங்களின் கூரை வீடுகளை சீரமைக்கும் பணி, மற்றும் ரோட்டோரம் தற்காலிக குடிசைபோடும் பணிக்காக கீற்றுகளை ஒரே நேரத்தில் வாங்க போட்டியிடுகின்றனர். இதனால் விலை அதிகரித்துள்ளது. முன்பு ரூ. 150க்கு விற்கப்பட்ட 50கீற்று கொண்ட ஒரு கட்டு தற்பொழுது ரூ.250க்கு விற்கப்படுகிறது. மேலும் அறுவடைக்கு தயாரான சம்பா பயிர் சேதமாகியதால் வைக்கோலுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்றாண்டு சேமித்து வைக்கப்பட்ட வைக்கோல் தான் விற்பனையாகிறது. இதனால் அதன் விலை ஒருகட்டு ரூ. 25ல் இருந்து ரூ.100 க்கு விற்கப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும் வாங்குவதற்கு மக்கள் தயாராக இருந்தாலும் வைக்கோல் மற்றும் கீற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

7. வெள்ளத்தால் மயில்களுக்கு பாதிப்பு: நீடாமங்கலம் அருகே ராயபுரம், காளஞ்சிமேடு, நாவல்பூண்டு, காளாச்சேரி, பெரம்பூர், பூவனூர் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டின் தேசிய பறவையான மயில்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படிகிறது. கடந்த மாத தொடர் வெள்ளத்தால் மயில்களுக்கு மர்மநோய் பரவிவருகிறது. இதனால் மயில்கள் பறக்கமுடியாமல், வயல்வெளியில் மயங்கிடந்தன. இந்த மயில்களுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க வடுவூர் பறவைகள் சரணாலயத்திற்கு எடுத்துசென்றனர்.

திருத்துறைப்பூண்டி தாலுகாவில் நிஷா புயலின் தாக்கம்:

திருத்துறைப்பூண்டு தாலுகாவில் ஜாசூல் அமைப்பின் அங்கத்தினர் அதிகம் பணிசெய்வதால் அவர்களுடன் இணைந்து வெள்ள பாதிப்பு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திருத்துறைப்பூண்டி தாலுகாவில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட 64 கிராமங்களில் 201 முகாம்களில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 401 பேர் தங்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கனமழையால் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 325.11 கி.மீ சாலைகள் முழுவதும் சேதமடைந்துள்ளன. சாலைகளில் உடைப்பு மற்றும் அறிப்பு ஏற்பட்டுள்ளதால் திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி, திருவாரூர், வேதாரண்யத்திற்கு மட்டுமே பஸ்கள் சென்று வருகின்றன. நாகை, பட்டுக்கோட்டை பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கால் ஏராளமான கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல்வேறு கிராமங்களுக்கு இன்னமும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

தொடர் மழையின் காரணமாக திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள கிராமங்கள் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டு தற்போது தண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது. முள்ளியாற்றில் உடைப்பு ஏற்பட்டு மழவராயநல்லூர், ராயநல்லூர், கீரக்களூர், கட்டிமேடு, வரம்பியம், திருத்துறைப்பூண்டி டவூன் சாமியப்பா நகர் ஆகிய பகுதிகளில் பொதுப்பணித்துறையினர் உடைப்பை சரிசெய்து கரையை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தாலுகா முழுவதும் 25 ஆயிரம் எக்டேரில் சம்பாவும், 10 ஆயிரம் எக்டேரில் தாளடியும் நீரில் முழ்கியுள்ளது.

சுவர் இடிந்தும், குளிரினாலும், பாம்பு கடித்ததாலும் தாலுகா முழுவதும் இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் இறந்துள்ளன. இந்நிலையில் மழையால் முற்றிலும் சேதமடைந்துள்ள வீடுகளுக்கு ரூ. 2000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி கடந்த 7ம்தேதிவரை 15ஆயிரம் வீடுகளுக்கு ரூ. 3கோடிவரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட கிராமங்களின் விபரம்:



பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கான உடனடி தேவைகள்:

1.அடுத்த மழை வருவதற்குள் ஊருக்கு பொதுவான டெம்பரரரி குடியிருப்புகள் உருவாக்கப்படவேண்டும்.
2.பள்ளிக்குழந்தைகளுக்கான பாடப்புத்ததகம், பை, சிலேடு, நோட்டு, பேனா, பென்சில் பொன்றவை.
3.ஆறு மாதத்திற்குட்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு கவனிப்பு அவசியம்
4.பாதுகாக்கப்பட்ட குடிநீர்
5.கிராமம் தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவேண்டும்
6.ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான மாற்று துணிகள் தேவைப்படுகிறது. பயன்படுத்திய, நல்லநிலையில் உள்ள துணிகள் கூட வரவேற்கப்படுகின்றன.
7.கனமழை, புயல் ஆகியவற்றால் உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணத்தொகையை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2லட்சமாக உயர்த்திய தமிழக அரசிற்கு நன்றி தெரிவிக்கும் அதே நேரத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.10 ஆயிரமும், பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரமும் நிவாரணம் வழங்கவேண்டும் கோரிக்கையும் வைக்கப்படுகிறது.

நீண்டகால அடிப்படையிலான தேவைகள்:

1.தாழ்வான இடங்களில் உள்ள கூரை வீடுகளுக்கு பதிலாக நிரந்தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித்தரவேண்டும்.
2.ஆறுகளில், வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
3.சிறு நீர்த்தேக்கங்கள் ஏற்படுத்தவேண்டும்
4.ரோடு, பாலங்களை சிறிதளவு உயர்த்தி தரமாய் கட்டமைக்க வேண்டும்
5.தோட்டக்கலை பயிர்கள் அதிகரிக்கவேண்டும்
6.புயல், வெள்ள காலங்களில் மக்களை காக்க மேடான பகுதியில் மண்டபம் கட்டவேண்டும்:
மழை, வெள்ள காலங்களில் பாதிக்கப்படும் மக்கள் பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். ஆனால் தற்போது பள்ளிக்கூடங்களே தண்ணீரி.ல் மூழ்கும் நிலையில் உள்ளது. எனவே ஒவ்வொரு ஊராட்சியிலும் மழை, வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்றும் விதமாக மேடான பகுதிகளில் மண்டபம் கட்டவேண்டும் என திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழுவின் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
7.அனைத்து பகுதிகளிலும் புயல் எச்சரிக்கை மையம் அமைக்க வேண்டும்
8.இயற்கை இடர்பாடுகளை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் கிராம அளவில் மேற்கொள்ளவேண்டும்

வேண்டுகோள்:

உங்களால் முடிந்த நிவாரண உதவிகளை அது பணமாகவோ, பொருளாகவோ அளிக்க விரும்பும் பட்சத்தில் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும் .

  1. தி. மாரிராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர்,நிலைத்த வாழ்வாதாரத்திற்கான கூட்டு செயல்பாடு (ஜாசூல்) - தமிழ்நாடு,எண்: 3, வது தெரு, மருதுபாண்டியநகர், நரிமேடு, மதுரை - 0௨,தொலைபேசி: 9442524545,மின்னஞ்சல்: jasul.tn@gmail.com, tmarirajan@gmail.காம்
  2. Mr.Saravanan, District convener – JASuL, C/O. SVCA NGO, Periyasingalthur, Thiruthuraipoondi, Thiruvarur (Dt) – 614713, PH: 9367721597