Monday, July 19, 2010

தனியார் மயமாகிறதா மின்வாரியம்? க. தங்கராஜா

First Published : 19 Jul 2010
சேலம்: தமிழக மின்வாரியத்தில் பல்வேறு நிலைகளில் ஊழியர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே ஆள் பற்றாக்குறையால் வேலைப்பளுவில் தவிக்கும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

÷தமிழகத்தில் 1.41 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்பட 2.12 கோடி மின் இணைப்புகள் உள்ளன. கடந்த 2000-ம் ஆண்டில் 1.20 கோடி மின் இணைப்புகள் இருந்தன. ஆனால் 10 ஆண்டுகளில் மின் இணைப்புகளின் எண்ணிக்கை ஏறத்தாழ இரட்டிப்பாகி உள்ளது. ஆனால் அதற்கேற்ப மின்வாரிய ஊழியர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.÷2002-ம் ஆண்டில் சுமார் 90 ஆயிரம் பேராக இருந்த மின்வாரியப் பணியாளர்களின் எண்ணிக்கை இப்போது 75 ஆயிரமாகக் குறைந்துள்ளது. முதல் வகுப்பு ஊழியர்களான மேல்நிலைப் பொறியாளர்கள், செயற் பொறியாளர்களின் எண்ணிக்கை கடந்த 2002-ல் 795 ஆக இருந்தது.

÷இரண்டாம் வகுப்பு ஊழியர்களான உதவிப் பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள் எண்ணிóக்கை 8,171 ஆகவும் இருந்தது. 3-ம் வகுப்பு ஊழியர்களான தொழில்நுட்ப உதவியாளர்கள், அலுவலகப் பணியாளர்களின் எண்ணிக்கை 27 ஆயிரமாகவும், உதவியாளர்கள் நிலையிலான 4-ம் நிலைப் பணியாளர்கள் சுமார் 53 ஆயிரம் பேர் இருந்தனர்.

÷தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 2,547 மின்வாரிய பொறியாளர்கள், ஊழியர்கள் இருக்க வேண்டிய நிலையில், இப்போது 1,200 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேட்டூரில் 1,728 ஊழியர்கள் பணியிடம் இருக்கும் நிலையில் 1,267 பேர் மட்டுமே இப்போது பணியில் உள்ளனர். எண்ணூர் அனல் மின்நிலையத்தில் 1,600 பணியிடங்களில் 779 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். வட சென்னையில் 1,974 இடங்கள் உள்ள நிலையில் 1,029 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

÷கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஓய்வு பெறும் பொறியாளர்கள், ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் இப்போது பணியாற்றும் பொறியாளர்கள், ஊழியர்களுக்கு பணிச்சுமை மிகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே மின்சாரப் பற்றாக்குறை உள்ள நிலையில், மின்உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்கள் எதுவும் பயனுக்கு வராமல், தொடர்ந்து காலதாமதமாகிக் கொண்டே செல்கிறது.

÷மின் பற்றாக்குறையைப் போக்குவதற்காக மேட்டூர், எண்ணூர், வடசென்னை பகுதிகளில் ரூ. 10 ஆயிரம் கோடிக்கு புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை மேற்பார்வை செய்வதற்காக, தரப் பரிசோதனை செய்வதற்காக, தனியாக ஆட்களை நியமிக்கவில்லை. சரியான மேற்பார்வை இல்லாததே மின் திட்டங்கள் பயனுக்கு வருவதை தாமதப்படுத்தும் முக்கிய காரணியாக இருப்பதாக அதிகாரிகள் குறை கூறுகின்றனர்.

÷நிலைமை இப்படி இருக்க, மேலும் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது மின்வாரிய நிர்வாகம். தலைமைப் பொறியாளர் முதல் உதவியாளர் வரையிலான சில பதவியிடங்களை சரண்டர் செய்யுமாறும் பணியாளர்களை 60 ஆயிரமாகக் குறைப்பதே இலக்கு என்றும், கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு மின்வாரியத் தலைமை உத்தரவிட்டுள்ளதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிóக்கின்றன.

÷இதேபோல் சில பணிகளை அவுட்சோர்சிங் விடவும் மின்வாரியம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. வடசென்னையில் நிலக்கரியை ரயில்களில் ஏற்றி வெளியூர்களுக்கு அனுப்பும் பணியை தனியாரிடம் ஒப்படைத்த மின்வாரியம் இப்போது வரை பிரச்னையையே சந்தித்து வருகிறது. வரும் காலங்களில் பொறியாளர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அரசு ஊழியர் அல்லாதவர்களை நியமித்து பணிகளைச் செய்யத் திட்டமிட்டு இருப்பதாக, மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Monday, July 12, 2010

ரூ.3,000 கோடி கடன் வாங்கிய கருணாநிதி!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=33676

உலக வங்கியில் கடன் வாங்கி குவித்தார் முதல்வர் ! சென்னை: தமிழக அபிவிருத்தி திட்டத்திற்காக உலக வங்கியிடம் சுமார் 3 ஆயிம் கோடிகளை மேலும் கடன் வாங்கினார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஏற்கனவே பல கோடிக்கணக்கில் நடந்த அபிவிருத்தி பணிகள் தவிர்த்து கூடுதலாக சுகாதாரம் மற்றும் சாலைப்பணிகள் மேம்பாட்டுக்கு இந்த நிதி வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாடு சுகாதாரத் திட்டம்: தமிழகத்தில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வந்த, தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் முதற்கட்டப் பணிகள் 2010 மார்ச்சுத் திங்களுடன் முடிவடைந்தன. இரண்டாம் கட்டமாக இத்திட்டத்தை மேலும் மூன்றாண்டு காலத்திற்குச் செயல்படுத்திட வேண்டுமென முதவர் கருணாநிதி மத்திய அரசு மூலம் உலக வங்கியைக் கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உலக வங்கி, 627 கோடியே 72 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 2013 செப்டம்பர் வரை மூன்றாண்டுகளுக்கு இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தைச் செயல்படுத்திட ஒப்புதல் அளித்துள்ளது. இதன் பயனாக, 564 கோடியே 94 இலட்ச ரூபாய் உலகவங்கி நிதியுதவியுடன் தமிழக அரசு ஏற்கும் 62 கோடியே 78 லட்ச ரூபாயும் சேர்ந்து மொத்தம் 627 கோடியே 72 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயல் படுத்தப்படும். இத்திட்டத்தின்கீழ், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம், கருப்பைவாய்ப் புற்று நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைத் திட்டம், மார்பகப் புற்றுநோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைத் திட்டம், இதய நோய்த் தடுப்புத் திட்டம், 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவைத்திட்டத்திற்குக் கூடுதல் ஆம்புலன்ஸ் ஊர்திகள், அமரர் ஊர்தி சேவைத்திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளைச் சீரமைத்தல்: அதேபோல, 1,670 கோடி ரூபாய் உலகவங்கி உதவியுடன் 490 கோடி ரூபாய் தமிழக அரசின் பங்கும் சேர்ந்து மொத்தம் 2 ஆயிரத்து 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தில் 11 மாவட்டங்களை இணைக்கும் 13 புறவழிச்சாலைகளை உள்ளடக்கிய 725 கிலோ மீட்டர் நீளச்சாலைகளை மேம்படுத்துதல்; 1,033 கிலோ மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளைச் சீரமைத்தல்; நெடுஞ்சாலைத்துறையின் நிறுவன அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகிய சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இத்திட்டத்திற்குக் கூடுதல் நிதி உதவி வழங்கி, 2012ஆம் ஆண்டு வரை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டுமென முதல்வர் கருணாநிதி விடுத்த கோரிக்கையை உலக வங்கி ஏற்றுக்கொண்டு 232 கோடியே 67 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது.

கடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின: அதன் தொடர்ச்சியாக தமிழக அரசும் 49 கோடி ரூபாய் கூடுதல் நிதி வழங்குகிறது. இதன் காரணமாக, 1,903 கோடி ரூபாய் உலக வங்கி நிதியும், 539 கோடி ரூபாய் தமிழக அரசின் நிதியும் சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்து 442 கோடி ரூபாய் திருத்திய திட்ட மதிப்பீட்டில் 31.3.2012 வரை இத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்றுநடைபெற்ற இந்த இரண்டு ஒப்பந்தங்களுள், தமிழ்நாடு சுகாதாரத்திட்டம் குறித்த ஒப்பந்தத்தில் மத்திய அரசின் சார்பாக அதன் நிதித்துறை இணைச்செயலாளர் அனூப் பூஜாரி, தமிழக அரசின் சார்பாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் வி.கு. சுப்புராஜ், உலக வங்கியின் சார்பில் அதன் முதுநிலை பொது சுகாதார வல்லுநர் பிரீத்தி குடேசியா ஆகியோர் கையொப்பம் இட்டனர்.

சாலை மேம்பாட்டுத்திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் மத்திய அரசின் சார்பாக அதன் நிதித்துறை இணைச் செயலாளர் அனூப் பூஜாரி, தமிழக அரசின் சார்பாக நெடுஞ்சாலைத் துறைத் துறைச் செயலாளர் சந்தானம், உலக வங்கியின் சார்பில் அதன் முதுநிலை பொது சுகாதார வல்லுநர் பிரீத்தி குடேசியா ஆகியோரும் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியின் போது, அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், வெள்ளக்கோவில் சாமிநாதன், உள்துறை முதன்மைச் செயலாளர் ஞானதேசிகன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சிறப்புச் செயலாளரும், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்கு நருமாகிய முனைவர் விஜயகுமார், நிதித்துறை சிறப்புச் செயலாளரும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநருமாகிய தியாகராஜன், மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மக்களுக்கு, மக்கள் நலனிற்கு உண்மையாக எத்தனை கோடிகள் சென்றடையும்? இதெல்லாம் சரிதான், ஆனால் இத்தனை கோடிகளில் எத்தனை மக்களின் நலனிற்க்காகச் செல்லப்போகிறது, எத்தனை கோடிகளை கழகக் கண்மணிகள் அமுக்கப் போகின்றன என்பதனையும் சொல்லிவிட்டால் நன்றாக இருக்கும். இத்தனை கோடிகள் கடனாகப் பெற்றால், யார் செல்லுத்தப் போவது? கோடிகளில் கமிஷன் பெற்று பயனாளிகளாக வாழ்க்கையை அனுபவிக்கப்போவது, ஆர்டர்கள் பெறும் கழகக் கண்மணிகள்தாம்! பிறகு மக்களுக்கு என்னக் கிடைக்கப் போகிறது?