Monday, July 12, 2010

ரூ.3,000 கோடி கடன் வாங்கிய கருணாநிதி!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=33676

உலக வங்கியில் கடன் வாங்கி குவித்தார் முதல்வர் ! சென்னை: தமிழக அபிவிருத்தி திட்டத்திற்காக உலக வங்கியிடம் சுமார் 3 ஆயிம் கோடிகளை மேலும் கடன் வாங்கினார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஏற்கனவே பல கோடிக்கணக்கில் நடந்த அபிவிருத்தி பணிகள் தவிர்த்து கூடுதலாக சுகாதாரம் மற்றும் சாலைப்பணிகள் மேம்பாட்டுக்கு இந்த நிதி வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாடு சுகாதாரத் திட்டம்: தமிழகத்தில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வந்த, தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் முதற்கட்டப் பணிகள் 2010 மார்ச்சுத் திங்களுடன் முடிவடைந்தன. இரண்டாம் கட்டமாக இத்திட்டத்தை மேலும் மூன்றாண்டு காலத்திற்குச் செயல்படுத்திட வேண்டுமென முதவர் கருணாநிதி மத்திய அரசு மூலம் உலக வங்கியைக் கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உலக வங்கி, 627 கோடியே 72 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 2013 செப்டம்பர் வரை மூன்றாண்டுகளுக்கு இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தைச் செயல்படுத்திட ஒப்புதல் அளித்துள்ளது. இதன் பயனாக, 564 கோடியே 94 இலட்ச ரூபாய் உலகவங்கி நிதியுதவியுடன் தமிழக அரசு ஏற்கும் 62 கோடியே 78 லட்ச ரூபாயும் சேர்ந்து மொத்தம் 627 கோடியே 72 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயல் படுத்தப்படும். இத்திட்டத்தின்கீழ், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம், கருப்பைவாய்ப் புற்று நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைத் திட்டம், மார்பகப் புற்றுநோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைத் திட்டம், இதய நோய்த் தடுப்புத் திட்டம், 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவைத்திட்டத்திற்குக் கூடுதல் ஆம்புலன்ஸ் ஊர்திகள், அமரர் ஊர்தி சேவைத்திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளைச் சீரமைத்தல்: அதேபோல, 1,670 கோடி ரூபாய் உலகவங்கி உதவியுடன் 490 கோடி ரூபாய் தமிழக அரசின் பங்கும் சேர்ந்து மொத்தம் 2 ஆயிரத்து 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தில் 11 மாவட்டங்களை இணைக்கும் 13 புறவழிச்சாலைகளை உள்ளடக்கிய 725 கிலோ மீட்டர் நீளச்சாலைகளை மேம்படுத்துதல்; 1,033 கிலோ மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளைச் சீரமைத்தல்; நெடுஞ்சாலைத்துறையின் நிறுவன அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகிய சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இத்திட்டத்திற்குக் கூடுதல் நிதி உதவி வழங்கி, 2012ஆம் ஆண்டு வரை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டுமென முதல்வர் கருணாநிதி விடுத்த கோரிக்கையை உலக வங்கி ஏற்றுக்கொண்டு 232 கோடியே 67 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது.

கடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின: அதன் தொடர்ச்சியாக தமிழக அரசும் 49 கோடி ரூபாய் கூடுதல் நிதி வழங்குகிறது. இதன் காரணமாக, 1,903 கோடி ரூபாய் உலக வங்கி நிதியும், 539 கோடி ரூபாய் தமிழக அரசின் நிதியும் சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்து 442 கோடி ரூபாய் திருத்திய திட்ட மதிப்பீட்டில் 31.3.2012 வரை இத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்றுநடைபெற்ற இந்த இரண்டு ஒப்பந்தங்களுள், தமிழ்நாடு சுகாதாரத்திட்டம் குறித்த ஒப்பந்தத்தில் மத்திய அரசின் சார்பாக அதன் நிதித்துறை இணைச்செயலாளர் அனூப் பூஜாரி, தமிழக அரசின் சார்பாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் வி.கு. சுப்புராஜ், உலக வங்கியின் சார்பில் அதன் முதுநிலை பொது சுகாதார வல்லுநர் பிரீத்தி குடேசியா ஆகியோர் கையொப்பம் இட்டனர்.

சாலை மேம்பாட்டுத்திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் மத்திய அரசின் சார்பாக அதன் நிதித்துறை இணைச் செயலாளர் அனூப் பூஜாரி, தமிழக அரசின் சார்பாக நெடுஞ்சாலைத் துறைத் துறைச் செயலாளர் சந்தானம், உலக வங்கியின் சார்பில் அதன் முதுநிலை பொது சுகாதார வல்லுநர் பிரீத்தி குடேசியா ஆகியோரும் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியின் போது, அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், வெள்ளக்கோவில் சாமிநாதன், உள்துறை முதன்மைச் செயலாளர் ஞானதேசிகன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சிறப்புச் செயலாளரும், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்கு நருமாகிய முனைவர் விஜயகுமார், நிதித்துறை சிறப்புச் செயலாளரும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநருமாகிய தியாகராஜன், மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மக்களுக்கு, மக்கள் நலனிற்கு உண்மையாக எத்தனை கோடிகள் சென்றடையும்? இதெல்லாம் சரிதான், ஆனால் இத்தனை கோடிகளில் எத்தனை மக்களின் நலனிற்க்காகச் செல்லப்போகிறது, எத்தனை கோடிகளை கழகக் கண்மணிகள் அமுக்கப் போகின்றன என்பதனையும் சொல்லிவிட்டால் நன்றாக இருக்கும். இத்தனை கோடிகள் கடனாகப் பெற்றால், யார் செல்லுத்தப் போவது? கோடிகளில் கமிஷன் பெற்று பயனாளிகளாக வாழ்க்கையை அனுபவிக்கப்போவது, ஆர்டர்கள் பெறும் கழகக் கண்மணிகள்தாம்! பிறகு மக்களுக்கு என்னக் கிடைக்கப் போகிறது?

No comments: