Tuesday, February 9, 2010

பி.டி.​ கத்தரிக்கு அனுமதி இல்லை: மத்திய அரசு அதிரடி முடிவு

புது தில்லி,​​ பிப்.9:​ மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி.​ கத்தரிக்காயை வர்த்த ரீதியில் பயிரிடுவதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

​ பி.டி.​ கத்தரிக்காய்க்கு பல்வேறு மாநிலங்கள்,​​ தன்னார்வ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயைப் பயிரிடுவது தொடர்பாக விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.​ பி.டி.​ கத்தரிக்காய் தொடர்பாக மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டியிருப்பதால் அரசு இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

""பி.டி.​ கத்தரிக்காய் பயிரிடுவதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.​ விவசாயிகளும் இதைப் பயிரிடுவதில் தயக்கம் காட்டுகின்றனர்.​ இத்தகைய சூழலில் அவசர அவசரமாக இதற்கு அனுமதி அளிப்பதில் அர்த்தமில்லை.​ மேலும் இந்த விஷயத்தில் அரசு எச்சரிக்கையுடனும் பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளித்தும் செயல்படவே விரும்புகிறது.​ இதைக் கருத்தில் கொண்டே,​​ இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,'' என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

பி.டி.​ கத்தரிக்காய் பயிரிடுவது தொடர்பாக தனது முடிவை புதன்கிழமை அறிவிப்பதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.​ ​

இந்த விஷயத்தில் மத்திய அமைச்சர் அவசரம் காட்டக் கூடும் என்றும்,​​ பி.டி.​ கத்தரிக்காயை அனுமதிக்கும் விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில்,​​ செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்,​​ தற்போதைக்கு பி.டி.​ கத்தரிக்காய் பயிரிட அனுமதிக்கப் போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அறிவியல் ரீதியில் பி.டி.​ கத்தரிக்காய் சாகுபடியால் எவ்வித சுற்றுச் சூழல் பாதிப்பும் ஏற்படாது என்றும்,​​ இதை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் நிரூபிக்கப்படும் வரை இதை அனுமதிக்கப் போவதில்லை என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

பி.டி.​ கத்தரிக்காய் தொடர்பாக முடிவு எடுப்பது என்பது அறிவியலை சார்ந்துள்ளது.​ அத்துடன் உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் நலனையும் காக்க வேண்டியுள்ளது.​ இத்தகைய சூழலில் முடிவெடுப்பது என்பது மிகவும் சிரமமான விஷயம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

மத்திய அரசு எடுத்துள்ள முடிவானது பி.டி.​ கத்தரிக்காய்க்கு மட்டுமே பொருந்தும்.​ எதிர்காலத்தில் வர உள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட வெண்டைக்காய் மற்றும் முட்டைகோஸ்,​​ நெல்,​​ தக்காளி ஆகியவற்றுக்குப் பொருந்தாது என்று அவர் குறிப்பிட்டார்.

பி.டி.​ கத்தரிக்காய் பயிரிடுவது தொடர்பாக 7 பெருநகரங்களில் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆலோசனைகளைக் கேட்டறிந்தார்.​ பெரும்பாலான கருத்துக் கேட்புக் கூட்டங்களில் எதிர்ப்பே தெரிவிக்கப்பட்டது.​ பல இடங்களில் எதிர்ப்பு அதிகரித்து கருத்துக் கேட்பு கூட்டம் பாதியிலேயே முடிந்துபோனது.

கடந்த மாதம் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் பேசும்போது,​​ பி.டி.​ கத்தரிக்காய்க்கு அனுமதி அளிப்பதற்கு முன் மக்களின் கருத்து கேட்டறியப்படும் என்று கூறினார்.​ அதனடிப்படையில்தான் பல நகரங்களில் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

""கருத்துக் கேட்புக் கூட்டங்கள் அனைத்துமே வெளிப்படைத் தன்மையோடு நடத்தப்பட்டது.​ இவற்றில் பல பாதியிலேயே முடிந்தன.​ பலவற்றில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.​ இது தொடர்பான முடிவை பொதுமக்களிடமே விட்டுவிட்டேன்.​ தற்போது எடுக்கப்பட்ட முடிவுக்கான காரணத்தையும் விளக்கிவிட்டேன்.​ எனது மனசாட்சி தெளிவாக உள்ளது,'' என்றும் அவர் கூறினார்.

இந்த பிரச்னை குறித்து நாடாளுமன்றத்திலும் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்திலும் விரிவாக விவாதிக்க வேண்டும் என்றே தான் விரும்புவதாக அவர் கூறினார்.

கடந்த ஆண்டு மே 13-ம் தேதி இத்துறைக்குப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை பி.டி.​ கத்தரிக்காய் விதை தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எவரையும் தான் சந்தித்ததில்லை என்ற அவர் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தபோது சந்தித்ததாக அவர் மேலும் கூறினார்.

​ ​ ஆந்திரம் மற்றும் கேரள மாநில முதல்வர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பது குறித்து கேட்டதற்கு,​​ ""கத்தரிக்காய் மொத்த உற்பத்தியில் 60 சதவீதம் விளைவிக்கும் பிகார்,​​ ஒரிசா,​​ மேற்கு வங்க மாநிலங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக,'' அவர் கூறினார்.

பாஜக மாநில முதல்வர்கள் அனைவரும் பி.டி.​ கத்தரிக்காய் சாகுபடிக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

​ பி.டி என்பதன் விரிவாக்கம்பாக்டீரியம் பாசிலுஸ் துரிஞ்ஜியென்சிஸ் என்பதாகும்.​ இவ்விதம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைக் கொண்டு உருவாக்கப்படும் கத்தரிக்காய் பி.டி.​ கத்தரிக்காய் என்றழைக்கப்படும்.​ இத்தகைய பி.டி கத்தரிக்காயை பூச்சி தாக்காது என்று விதை தயாரிப்பு நிறுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

மரபணு மாற்றம் செய்வதால் அதில் விஷத் தன்மை ஏற்படும் என்றும் இது மனிதனுக்கு கேடு விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிலைமையின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு சுற்றுச் சூழல் அமைச்சகம் ஒரு குழுவை அமைத்து இதுகுறித்து ஆராயச் செய்தது.​ இந்தக் குழு 2007-ம் ஆண்டில் சோதனை ரீதியில் சாகுபடி செய்து பார்த்தது.​ இதனடிப்படையில் வர்த்தக ரீதியிலான உற்பத்தியை 2009-ல் தொடங்க அனுமதி அளித்தது.

இது தவிர,​​ வெண்டைக்காய்,​​ நெல்,​​ தக்காளி ஆகியவற்றை பயிரிடுவது தொடர்பான ஆய்வுக்கும் அனுமதி அளித்துள்ளது.

2008-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் பி.டி.​ கத்தரிக்காய் சாகுபடிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கியது.​ ​

மரபணு மாற்ற விதைகள் தயாரிப்பில் மேஹைகோ-மான்சான்டோ பயோடெக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.​ இந்நிறுவனம் வழக்கமாக பயிரிடும் கத்தரிக்காய்க்கு 50 முதல் 80 தடவை வரை பூச்சி மருந்து அடிக்கப்படுகிறது.​ இவை அனைத்தும் மனித உடலுக்குள்தான் செல்கிறது என்று அந்நிறுவனம் வாதாடி வருகிறது.

பி.டி.​ கத்தரிக்காய்,​​ பூச்சி தாக்குதலை மட்டுமே தடுக்கும்.​ மனித உடலுக்குக் கேடு விளைவிக்காது என்றும் அது கூறிவருகிறது.

பூச்சிகள் தாக்குதலிலிருந்து காப்பதற்காக மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்,​​ மனித உடலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காது என்பதற்கு என்ன ஆதாரம் என்று இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தன்னார்வ நிறுவனங்கள் கோரி வருகின்றன.

நன்றி> தினமணி

No comments: