Thursday, February 4, 2010

மரபணு மாற்ற விதைகளை அனுமதித்தால் ஒட்டுமொத்த இந்திய விவசாயமும் அழியும்: நிலைத்த வாழ்வாதாரத்திற்கான தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பிப்ரவரி 2:

இந்தியா விவசாயிகளின் சுயசார்பை அழித்து, பொதுமக்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மரபணு மாற்ற கத்தரிக்காயை (BT கத்தரிக்காய்) அனுமதிக்க கூடாது என நிலைத்த வாழ்வாதாரத்திற்கான தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்சங்கத்தின் மாநில அளவிலான செயற்குழு கூட்டம் நேற்று (02/02/2010) மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் ஒய்.டேவிட் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் முறையே

பேசில்லஸ் துருஞ்சியான்சிஸ் என்ற பாக்டீரியாவை கத்தரியின் மரபணுவோடு புகுத்தி உருவாக்கப்பட்டுள்ள மரபணு மாற்ற கத்தரிக்காய் பொதுமக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. இதை பயிரிட்டால் நோய்கள் தாக்கப்படாது என கூறப்பட்டாலும் அது உண்மையென நிருபிக்கப்படவில்லை.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தொடர்பான அறிவியல்பூர்வமான தகவல்களை மத்திய அரசு இதுவரை வெளியிடாமல் மூடிமறைத்து வருகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், அவைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள், எதிர்விளைவுகள் பற்றி பதில் சொல்ல கடமைப்பட்டுள்ள மத்திய அரசு அதைப்பற்றிய எந்தவிதமான அறிவியல் பூர்வ தகவல்களையும் வெளியிடாமல் மாண்சான்டோ - மகிகோ போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு சாதகமாக நடந்து வருகிறது.

தாய்லாந்து, ஆஸ்திரேலியா, அங்கேரி, வெனிசுலா, பிரான்சு, இரசியா, நியுசிலாந்து போன்ற நாடுகள் எற்கெனவே மரபணு மாற்ற பயிர்களை ஏற்கெனவே தடைசெய்துள்ளன. இவை தவிர நமது நாட்டில் கேரளா, சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், பீகார், கர்நாடகா மற்றும் ஒரிசா மாநில அரசுகள் மரபணு மாற்ற பரிசோதணைகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மரபணு மாற்ற விதைகளை பயன்படுத்த துவங்கினால் விவசாயிகள் விதைகளுக்கு பன்னாட்டு கம்பெனிகளை சார்ந்திருக்கவேண்டும். பல ஆண்டுகளாக கடைபிடித்து வந்த பாரம்பரிய விவசாய முறைகளை மாற்றுவதால் மண்வளம் கெட்டுப்போகும். ஏற்கெனவே இம்மதிரியான மரபணு மாற்ற பருத்தி விதைகளை சாகுபடி செய்த மகாராஷ்டிரா, ஆந்திரா விவசாயிகளுக்கு ஏற்பட்ட கடன்தொல்லை, தற்கொலை போன்ற விளைவுகள் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கும் ஏற்படும்.

குறிப்பாக பி.டி கத்தரிக்காய் பயிரிட்டால் அதிலுள்ள மகரந்தங்கள் தேனீக்கள், வண்ணத்து பூச்சி பொன்றவற்றால் அருகிலுள்ள விவசாயிகள் பயிரிட்டுள்ள மற்ற பயிர்வகைகளில் மரபணு கலப்படம் நடக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் ஒட்டுமொத்த விவசாயம் பாதிக்கும். ஏற்கெனவே பி.டி ரக பயிர்களை பயிரிடும்போது 50-60 மீட்டருக்கு அப்பால்தான் மற்ற பயிர்களை பயிரிடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 60% சிறு, குறு விவசாயிகள் நிறைந்துள்ள நம்நாட்டில் சாதாரண விவசாயிகளின் நலனை கருதாது, பன்னாட்டு கம்பெனிகளுக்கு சாதகமாக மத்திய அரசு துணை போகக்கூடாது. இந்தியாவில் மரபணு மாற்ற பயிர்களை எக்காலத்திலும் அனுமதிக்ககூடாது.

வறுமை மற்றும் பசி, பருவநிலை மாற்றம், பல்லுயிர்த்தன்மை இழப்பு ஆகிய உலகளாவிய பிரச்சனைகளுக்கு மரபணு மாற்ற பயிர்கள் மூலம் தீர்வு காண முடியாது என ஐ.நா. சபை மற்றும் உலகவங்கி இணைந்து மேற்கொண்ட International Assessment of Agricultural Science, Technology and Development - IAASTD) ஆய்வில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பிற சமுக அமைப்புகள், விவசாயிகள் சங்கங்களுடன் வருகின்ற பிரவரி 6ம் தேதி நடைபெறவிருக்கின்ற மரபணு மாற்ற கத்தரிக்காயை வர்த்தக ரீதியில் அனுமதிப்பது தொடர்பான பொதுமக்கள் கருத்தரியும் கூட்டத்தில் கலந்துகொண்டு மரபணு மாற்ற கத்தரிக்காயை உடனே தடைசெய்ய வலியுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

மரபணு மாற்ற விவசாயம்

  • நமது நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் உணவு தேவையை நிறைவு செய்யாது

  • பாதுகாப்பான உணவையோ, சத்தான உணவையோ வழங்காது

  • ஏற்கெனவே பசுமை புரட்சி என்ற பெயரில் சீர்கேடடைந்துள்ள மண்ணை மேலும் சீர்கேடடைய செய்யும்

  • நமது சூழலை பால்படுத்தும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கெடுக்கும்

என்ற அடிப்படையில் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள், மானாவரி விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள் மற்றும் சமூக செயல்பாட்டாலர்களை உள்ளடக்கிய நிலைத்த வாழ்வாதாரத்திற்கான தமிழக விவசாயிகள் விவசாயிகள் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுருத்துகிறது

  • மரபணு மாற்ற கத்தரிக்காயை உருவாக்கி இருக்கும் மாண்சாண்டோ நிறுவனத்தின் இந்திய ஏஜெண்ட் ஆனா மகிகோ (Maharastra Hybrid Company) நிறுவனம் மரபணு மாற்றப்பட்ட தாவரங்களை உட்கொள்ளும் உயிரிகளின் பாதுகாப்பு குறித்த சோதனைகளை உரிய அளவில் நடத்தவில்லை என்ற அடிப்படையிலும், பெரிய அளவில் தட்டுப்பாடு வராத, பயிரிடுவதிலும் பெரிய முக்கியத்துவம் இல்லாத கத்தரிக்கு மரபணு மாற்றம் செய்வது என்பது இனி எதிர்காலத்தில் எல்லாப்பயிர்களுக்கு மரபணு மாற்றும் உள்நோக்கம் அடங்கியிருக்கிறது என்ற அடிப்படையிலும் மகிகோ மரபணு மாற்ற கத்தரிக்காய்க்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பபெற வேண்டும் என இந்த அமைப்பு கோறுகிறது.
  • மரபு மாற்று பயிரிடல் முறையால் பயிர்களின் பன்முகத்தன்மை அழியும் வாய்ப்பு அதிகம். இந்தியாவில் 12000க்கும் மேலான அரிசிவகைகள் பயன்பாட்டில் இருந்தன. பசுமை புரட்சியின் விளைவாக அவை தற்போது வெறும் ஐம்பதுக்கும் குறைவான ரகங்களாக குறைந்து போயுள்ளன. கத்தரிக்காயில் 2000க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் உள்ளன. அரசின் பி.டி கத்தரிக்கான வர்த்தக ரீதியிலான அனுமதி என்ற முடிவு கத்தரியின் பல்லுயிர்தன்மையை அழிந்து போகச்செய்யும் என்ற அடிப்படையில் பி.டி. கத்தரியை தடைசெய்ய கோறுகிறோம்.
  • மரபணு மாற்ற விதைகள் தொடர்பாய் சாதரண மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்கள், கேள்விகளை விளக்க நம் வேளான் பலகலை கழக விஞ்ஞானிகள் முன்வரவேண்டும். அப்போது தான் பொதுமக்களும், விவசாயிகளும் பி.டி கத்தரிக்காய் தேவையா, தேவையில்லையா, தடைசெய்யவேண்டுமா என்ற முடிவை பகுத்தறிய முடியும். அதற்கு வேளான் விஞ்ஞானிகள் சாதாரண மக்கள், விவசாயிகள் தரப்புடன் இணைந்து விளக்கம் தர வேண்டும் என இவ்வமைப்பு கோறுகிறது.
  • மரபணு மாற்ற தொழில்நுட்பம் இயற்கையாக நடந்தவரை அறிவியலாக மட்டுமே இருந்தது. ஆனால் அந்த அறிவியல் பன்னாட்டு நிறுவனங்களின் கையில் சிக்கி அறிவியல் மூன்றாம் உலகநாடுகளின் விவசாயிகளையும், நுகர்வோரையும் அடிமைப்படுத்தும் அரசியலாக மட்டுமே இன்று பார்க்கப்படுகிறது. விதைகள் மீது விவசாயிகள் கொண்டுள்ள பாரம்பரிய உரிமைகள் பன்னாட்டு நிறுவனங்களிடம் அறிவுசார் சொத்துரிமை என்ற பெயரில் களவு போகின்றது என்ற அடிப்படையில் மத்திய, மாநில அரசின் வேளாண் பல்கலைகழகங்கள், தனியாருடன் இணைந்து மரபணு மாற்று சோதனைகளில் ஈடுபடக்கூடாது என வலியுறுத்துகிறோம்
  • வேளாண்மை இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வருகின்ற காரணத்தினால் மரபணு மாற்ற பரிசோதனைகளை அனுமதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே உண்டு. இதனை தடைசெய்யும் விதத்தில் மத்திய அரசு உருவாக்கி அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுத்தி வரும் தேசிய உயர் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையத்தை தடைசெய்யவேண்டும் என இவ்வமைப்பு கோருகிறது.
  • மரபணு தொழில்நுட்பம் போன்ற நாட்டின் உணவு பாதுகாப்பு, உணவு உத்திரவாதம், இறையாண்மை சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நாடுதழுவிய கருத்துக்கணிப்பு அவசியம். அதிலும் குறிப்பாக நாட்டுமக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் உள்ளூர் பஞ்சாயத்து அமைப்புகளின் கிராம சபா தீர்மானங்கள் கணக்கில் கொள்ளப்படவேண்டும் என இவ்வமைப்பு கோறுகிறது.மரபணு மாற்ற முறை விவசாயம், அதுதொடர்பான கள ஆய்வுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். மரபணு மாற்ற பயிர்கள் மீதான நீண்டகால பாதுகாப்பு ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்னரே கள ஆய்வுக்கு அனுமதிக்கவேன்டும். அனுமதி பெறாமல், சட்டத்துக்குபுறம்பாக, உண்மையை மறைத்து, கள்ளத்தனமாக மரபணு மாற்ற ஆய்வில் ஈடுபட்ட நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படவேண்டும். அவர்கள் மீது வழக்கு தொடரப்பட வேண்டும்.
  • இந்திய அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் நமது அரசு அமெரிக்கா அரசுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தம், வால்-மார்ட் (WAL-MART), மான்சான்டோ (MON SANTO) போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் முதல், நம்நாட்டு ரிலையன்ஸ் (RELIANCE) நிறுவனம் போன்ற பகாசூர கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வேளாண்மையையும் ஒப்படைக்கும் விதமாகவே செயல்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக மரபணுமாற்று தொழில்நுட்பத்தின் (GENETIC ENGINEERING) பயன்பாட்டை விவசாயம், மீன் வளர்ப்பு, கால் நடை வளர்ப்பு போன்ற துறைகளில் அதிகப்படுத்துதல், வேளாண்மையில் அறிவுசார் சொத்துரிமையை அதிகப்படுத்துததல் போன்ற செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுவது நமது உணவு இறையாண்மைக்கு எதிராக உள்ளமையால், இவ்வொப்பந்தங்களில் இருந்து இந்தியா அரசு தானே முன்வந்து விளகிக்கொள்ளவேண்டுமென வலியுறுத்துகிறோம்.
  • மத்திய அரசு பன்னாட்டு கம்பெனிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்திய விவசாயத்தில் தலையிடுவதை தடுத்து, பாரம்பரிய விவசாய முறைகளையும், விவசாயிகளை பாதுகாக்கவேண்டும். குறிப்பாக நேயாற்ற சமுதாயத்தை உருவாக்கிட இயற்கை விவசாய முறைகளில் விளைவிக்கப்பட்ட விளைபொருட்களுக்கு சரியான விளைநிர்ணயம் வழங்கிடவேண்டும்.

No comments: