Sunday, September 12, 2010

விவசாய பம்ப் செட்டுகளுக்கு விரைவில் மீட்டர்: அதிர்ச்சியில் விவசாயிகள் - சிவ. மணிகண்டன்

கோவை: விவசாய பம்ப் செட்களுக்கு மீட்டர் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதையடுத்து, விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மீட்டர் பொருத்தும் நடவடிக்கை வரும் காலத்தில் விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்வதில் கொண்டு வந்துவிடும் என்றும் அவர்கள் அச்சப்படுகின்றனர்.

விவசாயிகளுக்குப் புதிதாக மின்மோட்டார்கள் இலவசமாக மாற்றித் தரப்படும் எனமுதல்வர் கருணாநிதி அறிவித்தார். தமிழகத்தில் இப்போது பயன்பாட்டில் இருக்கும் விவசாய பம்ப் செட்டுகள் திறன் குறைவாக இருப்பதால், மின்சாரம் அதிகமாகச் செலவாகிறது என்றும், மின்பற்றாக்குறை ஏற்படுவதற்கு இந்த பம்ப் செட்டுகளும் ஒரு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாகவும், மற்ற விவசாயிகளுக்கு 50 சத மானியத்திலும் மின்மோட்டார்கள் மாற்றித் தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, மின்மோட்டார் வழங்கும் திட்டத்துக்கான ஆயத்தப் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றன. மின்வாரியம் மூலமாக விவசாயிகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்களுடன் அண்மையில் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத், உற்பத்தித் திறன் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

அப்போது மோட்டார்களின் தரம் குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதில் அளித்த ஆட்சியர், மின்சேமிப்புத் திறன் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே மின்மோட்டாருக்கான தொகை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மின்சேமிப்புத் திறனை கண்டறிவதற்காக புதிய மோட்டார்கள் வழங்குவதற்கு முன்பே விவசாய பம்ப் செட்டுகளுக்கு மீட்டர் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இப்போது மின்வாரிய அலுவலகங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள், விவசாய மின் இணைப்பு பெற்ற வருடம், இணைப்பு பெறும்போது பயன்படுத்திய மோட்டாரின் குதிரைத் திறன், தற்போது பயன்படுத்தும் மோட்டாரின் குதிரைத் திறன் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

சில பகுதிகளில் வழங்கப்பட்ட விண்ணப்பங்களில் பம்ப் செட்டுக்கு மீட்டர் பொருத்துவதற்கு சம்மதமா எனக் கேட்கப்பட்டிருக்கிறது.

பழைய மோட்டாருக்கும், புதிதாக வழங்கும் மோட்டாருக்கும் உள்ள மின்சேமிப்புத் திறனை மீட்டர் பொருத்தினால்தான் கணக்கிட முடியும் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

ஆனால், மீட்டர் பொருத்திவிட்டால் மின்உபயோகத்தின் அடிப்படையில் இலவச மின்சாரம், இல்லாவிட்டால் கட்டணம் எனப் படிப்படியாக இலவச மின்சாரம் இல்லாத நிலைக்குப் போய்விடும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலர் கந்தசாமி கூறியது: மீட்டர் பொருத்தினால் மட்டுமே மின் உபயோகத்தைக் கணக்கிட முடியும் என்பதல்ல. மின் உபயோகத்தை அளவிட நவீன கருவிகள் வந்துவிட்டன. ஒரு மணி நேரத்தில் மோட்டார் ஓடியதை வைத்தே கணக்கிட்டுவிடலாம்.

இப்போது மழை இல்லாத காரணத்தால் பம்ப் செட்டுகளின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. அடுத்த இரு மாதங்களில் பருவமழை வந்துவிடும் என்பதால் பமப் செட்டுகள் பயன்பாடு பெரிய அளவுக்கு இருக்காது. இச்சூழலில் தற்போது மீட்டர் பொருத்தி கணக்கிடுவதும், இன்னும் இரு மாதங்களில் புதிய மோட்டார்கள் வழங்கியதும் அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் சரியானதாக இருக்காது.

அதோடு, மீட்டர் பொருத்துவதால் வரும் காலங்களில் இலவச மின்சாரம் படிப்படியாக குறைக்கப்படும் என்ற அச்சம் விவசாயிகள் இடையே பரவலாக இருக்கிறது என்றார்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இலவச மோட்டார் வழங்குவதற்காக பெரிய, நடுத்தர, சிறு-குறு விவசாயிகள் எத்தனை பேர் என்பது குறித்த கணக்கெடுப்புதான் தற்போது நடைபெற்று வருகிறது.

பாசன நிலம், பயன்படுத்தும் மோட்டாரின் குதிரைத் திறன் ஆகிய விவரங்களை மட்டுமே சேகரித்து வருகிறோம். மற்ற விஷயங்களை அரசுதான் முடிவு செய்யும் என்றனர்.

No comments: