Monday, April 19, 2010

SLFA மாநில பிரதிநிதிகள் கலந்தாலோசனை கூட்டம்

தேதி:பிப்ரவரி, 11, 12 (வியாழன், வெள்ளி), 2010
இடம்:டீநோபிளி பாஸ்டோரல் சென்டர், கே.புதூர், மதுரை


கலந்தாய்விற்கான பின்னணி:
நிலைத்த வாழ்வாதாரத்திற்கான கூட்டுசெயல்பாடு (Joint Action for Sustainable Livelihood – JASuL) – ஜாசூல் அமைப்பு கடந்த இரண்டாண்டு காலமாக நாமது கிராமப்புற வாழ்வாதாரங்களான நிலம், நீர், விவசாயம், கால்நடை, காடு வளர்ப்பு போன்ற கிராமப்புறமக்களின் அடிப்படை கட்டுமானங்களை பாதுகாப்பது, நிலைத்த தன்மையுடன் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும், தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் (IAMWARM) என்ற பெயரில் பாசன நீரை தனியார் மயமாக்கும் உலகவங்கியின் முன்முயற்சிகள் குறித்தும், வெளியிடு பொருட்கள் குறைவான அல்லது செலவு குறைச்சலான விவசாயம் குறித்தும், காலநிலை மாற்றத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தமிழகத்தின் பலபகுதிகளில் உள்ள சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் மத்தியில் பயிற்சிகள், கருத்தரங்கள், விவசாயிகளுடனான நேரடி சந்திப்புகள் வாயிலாக விவசாயிகள் மத்தியில் பிரச்சாரபணிகளை முன்னெடுத்து வருகிறது.

அத்துடன் இன்றைய உலகமயம், தாரளமயம், தனியார்மயச்சூழலில் விவசாய அமைப்புகளின் பங்கு, போட்டி நிறைந்த, சந்தைக்கான உற்பத்தி என்ற மத்திய, மாநில அரசுகளின் பன்னாட்டு, இன்னாட்டு ஏகபோக கம்பெனிகளுக்கு சாதகமான கொள்கைகள் குறித்தான சிந்தனையை விவசாயிகள் மத்தியில் கொண்டு சென்றுள்ளது. அதிலும் குறிப்பாக உலகவங்கியின் பாசன தண்ணீரை தனியார்மயமாக்கும் முயற்சியினை அம்பலப்படுத்தும் விதமான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது.

31துணைவடிநிலப்பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு மண்டல விவசாயிகள் - சமூக செயல்பாட்டளர்களுக்கான தமிழ்நாடு நீர்நிலவள திட்டம் (IAMWARM) குறித்த கலந்தாய்வு கூட்டம் 2008 மே மாதம் 16, 17 தேதிகளில் மதுரை பீல் பண்ணை, சாக்கிளிபட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உலகமய கண்ணோட்டத்தில் விவசாயிகளின் பிரச்சனை அணுக கூடிய, கிராமப்புற வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கும் ஆக்கபூர்வமான பணியில் ஈடுபடக்கூடிய ஓர் விவசாய அமைப்பினை உருவாக்கவேண்டியதன் தேவை பற்றி விவாதிக்கப்பட்டது. அதன் முடிவில் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான விவசாயிகள் சங்கம் ( Sustainable Livelihood Faramers Association - SLFA ) என்ற அமைப்பை ஏற்படுத்து என்ற கோரிக்கை தென்மாவட்ட விவசாயிகளால் முன்மொழியப்பட்டு பின்னர் வடக்கு மண்டல விவசாயிகளுக்கான விழுப்புரம், திருப்பத்தூர் கூட்டம், மத்திய மண்டல விவசாயிகளுக்கான பெரம்பலூர் கூட்டங்களில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்தந்த மண்டலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய மாநில அளவிலான முதல் SLFA அட்காக் கமிட்டி கூட்டம் 2009 மார்ச் 26ம் தேதி ஜாசூல் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் SLFA அமைப்பை மாநில அளவில் உருவாக்குவது என இறுதியாக முடிவெடுக்கப்பட்டது. இச்சங்கம் மாநில அளவில் விவசாய விளைபொருட்களின் விலை நிர்ணய கோரிக்கையையும் உள்ளடக்கிய, விவசாய பிரச்சனைகளைகளின் உலகப்பின்னணியை உள்ளூர் கண்ணோட்டத்துடன் அணுக கூடிய ஒரு மாறுபட்ட விவசாயிகளின் அமைப்பாக செயல்படவேண்டும் என எல்லோராலும் இக்கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து கிராம அளவில், துணைவடிநிலப்பகுதி அளவில், மாவட்ட அளவில் என பல்வேறு விவசாயிகள் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன்மூலம் தமிழகத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் செயல்படுத்தப்படுகின்ற 19 மாவட்டங்களில் உள்ள விவசாய செயல்பாட்டாளர்கள் மத்தியில் தொடர் செயல்பாட்டிற்கான ஒத்த சிந்தனையாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அடையாளம் காணப்பட்டவர்கள் மத்தியில் செயல்பாட்டு ரீதியான உறவுகளை ஜாசூல் அமைப்பு கடந்த ஒருவருட காலமாக பேணி வந்துள்ளது.

இவ்வுறவுகளையும், ஒத்த சிந்தனைகளையும் அமைப்புரீதியாக கொண்டுவரும் முகமாக மாநில அளவிலான விவசாயிகள் கலந்தாலோசனை கூட்டம் கடந்த பிப்ரவரி 11, 12 தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்கு ஏற்கெனவே மாவட்ட அளவில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விவசாய தலைவர்களில் இருந்து இருவர் வீதம் அழைக்கப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் நடைபெறாத மாவட்டங்களில் இருந்து மாவட்டத்திற்கு ஒரு விவசாயியும் அழைக்கப்பட்டார். இவர்களுடன் இணைந்து பணிசெய்யும் ஒரு சமூக செயல்பாட்டளரும் என மொத்தம் 105 பேர் அழைக்கப்பட்டனர். 105பேரில் 70 பேர் கலந்து கொண்ட இரண்டு நாள் கூட்டம் மேற்சொன்ன தேதிகளில் நடைபெற்றது. அக்கூட்டத்தின் விபரம் பின்வருமாறு.

முதல் நாள் அமர்வு (11/02/2010):
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் திருமதி. சாந்தி அவர்களின் வரவேற்புறைக்கு பின் கலந்தாய்வு கூட்டம் சரியாக 10.30 மணிக்கு துவங்கியது. அதனை தொடர்ந்து கலந்தாய்விற்கான பின்னணி குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் மாரிராஜன் விளக்கினார்.

அதன்பின்னர் இந்தியா விவாசாய நெருக்கடி என்ற தலைப்பில் கருத்துரை நடைபெற்றது. மாநில அமைப்பாளர் ஒய். டேவிட் இக்கருத்துரைக்கு தலைமை தாங்கினார். விவசாய நெருக்கடி குறித்து திருச்சி மண்டல அமைப்பாளர் திரு.சிவப்பிரகாசமும், விதை மற்றும் உணவு நெருக்கடி குறித்து நிலைத்த விவசாய செயல்பாட்டாளர் திருச்சி ராஜாராம் உரையாற்றினார். அவரை தொடர்ந்து நிலம் அன்னியமாதல் என்ற தலைப்பில் திரு. சி.ப. வேணு, சேலம் மண்டல அமைப்பாளரும், கம்பெனி விவசாயம் என்ற தலைப்பில் வழக்கறிஞர் தனராஜ் ஆகியோர் உரையாற்றினர். அதனை தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு கருத்துரையாளர்கள் விளக்கமளித்தனர். டாக்டர். மாரிமுத்து, சென்டெக்ட் கிருஷி விக்கியான் கேந்திரா அவர்களின் நிறைவுறைக்கு பின் முதல் அமர்வு நிறைவு பெற்றது.

மதிய உணவுக்கு பிந்தைய நீர் நெருக்கடி என்ற இரண்டாம் அமர்விற்கு இயற்கை விவசாயி மற்றும் முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான திரு. ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். முதலில் தமிழகத்தின் நீர்வள ஆதாரங்கள் என்ற தலைப்பில் நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் திரு. ராஜீ உரையாற்றினார். அவரை தொடர்ந்து பாரம்பரிய நீர் மேலாண்மை என்ற தலைப்பில் மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. நாதன் உரையாற்றினார். அடுத்ததாக பருவநிலை மாற்றமும் அதனால் ஏற்பட்டுள்ள நீர், விவசாய நெருக்கடிகளும் என்ற தலைப்பில் தாளாண்மை உழவர் இயக்கத்தின் அமைப்பாளரும், குடுமக்கள் உலக அரங்கு - தமிழ்நாடு அமைப்பினை சேர்ந்த திரு. பாமயன் என்ற பாலசுப்பிரமணி அவர்கள் உரையாற்றினார். இறுதியாக நீர்வள மேம்பாட்டிற்கான பெருந்திட்டங்களும் அதன் முரண்பாடுகளும் என்ற தலைப்பில் மானாமதுரை ஒன்றிய கவுன்ஸ்லர் மற்றும் பொறியாளருமான திரு. பாலசுப்பிரமணி மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் மாரிராஜனும் இணைந்து உரையாற்றினர்.

ஒரு மணி நேர இடைவேளைக்கு பின்பு விவசாயிகளின் கருத்துப்பகிர்விற்கான அமர்வு திரு. எம். எஸ், ஜெயராஜ், ராமநாதபுரம் மண்டல அமைப்பாளரின் தலைமையில் கூடியது. இவ்வமர்வில் விவசாயிகள் தங்களுடைய விவசாய அனுபவங்கள், குடும்ப பின்னணி, இன்றைய கருத்துரை நிகழ்வுகள் குறித்து தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இரவு உணவுக்கு பின் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேராழிகள் குறித்தான ருத்திரம் 2015 என்ற திரைப்படம் திரையிடப்பட்டது.

இரண்டாம் நாள் அமர்வு (12/02/2010):

பங்கேற்பாளர்களின் வேண்டுகோளுக்கினங்க, பாசன விவசாயிகள் சங்கம், அமைப்பு, செயல்படும் முறைகள் குறித்து அடவிநயனார் அணைக்கட்டு நீர் பகிர்மான குழு உறுப்பினர் மற்றும் கொடிக்குறிச்சி பஞ்சாயத்து தலைவரும் பொறியாளருமான திரு. செல்லத்துரை அவர்கள் விளக்கமளித்தார். பங்கேற்பாளர்களின் நேரடி கேள்விகளுக்கு பொறியாளர் பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து உதாரணங்களுடன் விளக்கினார். இவ்வமர்வினை மாநில ஒருங்கினைப்பாளர் மாரிராஜன் ஒருங்கிணைத்தார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சி நிரல்படி அமர்வுகள் துவங்கின. முதலாவதாக ஏன் இந்த SLFA விவசாய சங்க முயற்சி என்ற தலைப்பிலான அமர்விற்கு சென்னை மண்டல அமைப்பாளர் திரு. ஜான்சன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் ஒய். டேவிட் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரது சிறப்புரையில், நமது விவசாய வரலாற்றை உற்றுநோக்கினால் விவசாயம் என்றுமே விவசாயிகளின் கையிலேயே இருந்தது என்ற வரலாற்று உண்மை புரியும் என்றார். விவசாயம் சம்பந்தப்பட்ட முடிவுகள், குறிப்பாக விதைகள், இடுபொருட்கள் சம்பந்தமான முடிவுகள் விவசாயிகளாலேயே எடுக்கப்பட்டது. மன்னர்கள் குளங்களை வெட்டி விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் ஒத்தாசை புரிந்துள்ளனர். நீர்பகிர்மானங்கள் குடிமராமத்து என்ற முறையில் உள்ளூர் அமைப்புகளால் நிர்வகிக்கப்பட்டது. எக்காலத்திலும் நீர் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட விசயங்கள் மையப்படுத்தப்பட்டதில்லை. அவை பரவலாக்கப்பட்டே இருந்துள்ளன. அதனால் தான் நம்மால் இன்று வறட்சி மாவட்டங்கள் என அழைக்கப்படும் மாவட்டங்களில் கூட எக்டேருக்கு 16 டன் வரை மகசூல் எடுக்கப்பட்டுள்ளது. இச்சாதனையை இன்றைய பல்கலை கழகங்கள், பசுமை புரட்சிகள், இரண்டாம் பசுமை புரட்சிகளால் எட்டிக்கூட பார்க்க முடியாது. நிலம், விவசாயத்தின் மீதான இந்த வன்முறையான புரட்சிகள் ஏற்படுத்திய விளைவு நம்முடைய நிலங்களின் வளமிளப்பு மற்றும் மலட்டுதன்மைதான். நமது பாரம்பரியம் என்றுமே நிலைத்த தன்மையுடையதாய், சூழலுக்குகந்ததாய் எல்லோரலும் உற்பத்தியில் ஈடுபடக்கூடியதாய் மட்டுமே உற்பத்திமுறை இருந்து வந்துள்ளது.

நிலைத்த தன்மையுடைய நம்முடைய பாரம்பரியமுறை ஆங்கிலேயர் காலத்தில் வரிவசூலூக்க வேண்டி மையப்படுத்தப்பட்டதன் விளைவே பஞ்சம், உணவு பற்றாக்குறை, அரிசி இறக்குமதி என்று நாடு சின்னாபின்னப்படுத்தப்பட்டது. நாடு சுதந்திரம் பெற்ற ஆரம்ப வருடங்கள் நமது பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் விதமான வேலைகள் செய்யப்பட்டன. அதன் விளைவுதான் ஜமீன்தார் ஒழிப்பு சட்டம், நில உச்சவரம்பு சட்டம், குறைந்த பட்ச கூலி சட்டம், சிறு, குறு விவசாயிகள் மேம்பாட்டுக்கான வட்டார வளர்ச்சி திட்டங்கள் போன்றவைகளாகும். ஆனால் காலப்போக்கில் அரசின் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறிப்பாக இந்திரா காந்தி காலத்தில் வெளிநாட்டு கடன் வாங்க தொடங்கிய பின் சுயசார்பு கொள்கைகளில் இருந்து முற்றிலுமாக வெளியேற தொடங்கினோம். 1990களில் முற்றிலும் சுயசார்பை கைவிட்டு சந்தைப்பொருளாதாரத்தை பின்பற்ற துவங்கி 25 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த 25வருடங்களில் விவசாயிகள் மத்தியில் சந்தைப்பொருளாதாரம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் கணக்கில் அடங்கா.

எல்லாவற்றிற்கு முத்தாய்ப்பாய் ஒன்றறை லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என மத்திய அரசின் குற்ற ஆணையம் (Crime Bureo) தன்னுடைய வருடாந்தர அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாங்கும் திறன் அற்றுப்போய் உள்ளனர். ஆனால் ஆளும் தரப்பினர் நாடு வளருகிறது. 8% வளர்ச்சியை அடைந்துவிட்டோம். இதை இரட்டை இலக்கமாய் மாற்றினால் வல்லரசாகிவிடலாம் என முழங்குகின்றனர். இங்கு எது வளர்ச்சி என்ற கேள்விக்கு விடை தேவைப்படுகிறது. வளர்ச்சி குறிப்பிட்ட சதவிதத்தினரை மட்டும் சார்ந்த்தா அல்லது எல்லோருக்குமான என்ற கேள்விகள் எழும்புகின்றன. இவ்வளர்ச்சியின் இலக்கணம் பொருள் உற்பத்தியை சார்ந்ததா அல்லது சேவைத்துறையை சார்ந்ததா, என்ன மாதிரியான பொருளுற்பத்தி, சேவை என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காணப்படாத வரை இன்றைய விவசாய பிரச்சனைகள் மற்றும் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு தேட முடியாது.

இந்த பிரச்சனைகளுக்கான தீர்வை தேட வேன்டிய வரலாற்று தேவையை தமிழகத்தில் நிறைவு செய்யவேண்டிய பணி இங்கு கூடியுள்ள விவசாயிகளுக்கும், சமூக செயல்பாட்டாளர்களுக்கும் உண்டு. அதற்கான ஒரு விவசாய இயக்கமாக இந்த நிலைத்த வாழ்வாதத்திற்கான விவசாயிகள் சங்கம் திகழ வேண்டும். இவ்வமைப்பு விவசாயிகளின் விளைபொருளுக்கான விலைநிர்ணய பிரச்சனைகளுடன் அதற்கான உலக பின்னணியை கேள்விக்குள்ளாக்கு இயக்கமாக உருவெடுக்கவேண்டும்.

இதனை செயல்வடிவம் கொடுக்கும் விதமாக உலகவங்கி கடனின் கீழ் செயல்படுத்தப்படும் நீர்வள நிலவள திட்டத்தை, உலகவங்கியை, மாநில, மத்திய அரசுகளின் தவறான கொள்கைகளை கேள்வி கேட்கும் வகையில் மாநாடுகளை நடத்தி நமது கோரிக்கைகளின் வாயிலாய் அரசுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டிய தேவை உள்ளது. அதையும் கூட உடனடியாக இந்த ஆண்டே செய்யும் பட்சத்தில் உலகவங்கி திட்டத்தில் மாற்றங்களை செய்யும் வாய்ப்பு உண்டு என்ற வகையில் இதை சரியான தருணம் என்று உணருகிறேன் என்றார்.

இதனை தொடர்ந்து தேனீர் இடைவேளைக்கு பின் குழுவிவாதம் தொடங்கியது. குழு விவாதத்தை கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் திரு. அப்பாவு பாலாண்டார் வழிநடத்தினார். நீர் மற்றும் உணவு நெருக்கடிக்கான தீர்வுகள், அமைப்பு ரீதியான செயல்பாட்டு நெறிமுறைகள், கூட்டு செயல்பாடு என்ற தலைபுகளின் கீழ் தெற்கு, மத்திய, வட மண்டல என குழுக்களாய் தனித்தனியே பிரிந்து விவாதித்து அறிக்கை சமர்ப்பித்தனர்.

குழு விவாத அறிக்கைகளிலிருந்து நிலைத்த வாழ்வாதாரத்திற்கான விவசாயிகள் சங்க மாநில கலந்தாலோசனை குழு கூட்டத்தின் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- மக்களின் தண்ணீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தெளிவான நீர்க்கொள்கை தேவை. மக்களிடம் விரிவாக விவாதிக்கப்பட்டு இக்கொள்கை உருவாக்கப்படவேண்டும். உலகவங்கி, பன்னாட்டு கம்பெனிகள் போன்ற வல்லாதிக்க நிறுவனங்களின் ஈடுபாடு, கொள்கை உருவாக்கும் பின்னணியில் இருக்கக்கூடாது.

- ஏரி, குளங்கள், கண்மாய்கள், ஆற்றுப்பாசனம் போன்ற பொதுநீராதாரங்கள் முக்கியத்துவம் பெறவேண்டும். அவை சரியான முறையில் பராமரிக்கப்படவும், பாதுகாக்கப்படவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். மேலும் பொது நீர்நிலைகள் மீதான ஆக்கிரமிப்புகள் தமிழ்நாடு குளங்கள் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டப்படி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டும்.

- பொது நீராதாரங்களின் மேலாண்மை அந்தந்த ஆயக்கட்டுதாரர் சங்கங்களிடம் ஒப்படைக்கவேண்டும். பொதுப்பணித்துறையின் தேவையற்ற தலையீடு இன்றி இவ்வமைப்புகளை பலப்படுத்தி குடிமராமத்து முறைகளை மறுஉருவாக்கம் செய்ய பொதுப்பணித்துறை பக்கபலமாக இருக்கவேண்டும்.

- நீராதார அமைப்புகளில் உள்ள வேலிக்கருவேல், மற்றும் சமூகக்காடுகள் திட்ட மரவகைகள் அகற்றப்படவேண்டும். இனிமேல் புதிதாக இவ்வகையான மரங்களை நடக்கூடாது.

- ஆறுகளில் அளவுக்கதிகமாக மணல் அள்ளுவதை தடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆறுகளில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகளை மறுசுழற்சி செய்து விட வேண்டும்.

- பாசான தண்ணீரை வர்த்தகமயமாக்கும் போக்கு உடனே தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

- வேளாண்மைக்கான நிலங்கள் மற்றும் இயற்கை வளங்களின் மீதான உரிமை விவசாயிகளிடமே இருக்கவேண்டும்.. சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழிற்பூங்காக்கள் மற்றும் பிற பயன்பாடுகளுக்கு நிலங்களை கைமாற்றிவிடுவது உணவு உற்பத்தியை பாதிக்கும் என்ற அடிப்படையில் வேளாண் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு நிலங்களை கையகப்படுத்துவதை தடுக்க கோருகிறோம்.

- விவசாயம் நீடித்ததாகவும், நிலைத்ததாகவும், சுற்றுச்சூழலுக்கு இசைந்ததாகவும் இருக்கவேண்டும் என்றால் இன்று பன்னாட்டு பகாசுர கம்பெனிகளின் கைகளில் கம்பெனி விவசாயம் அல்லது கார்ப்பரேட் விவசாயம் என்ற பெயரில் விவசாயம் திணிக்கப்படும் போக்கு மாற்றப்பட்டு உள்ளூர் விவசாயிகளுக்கு சாதகமானதாய் மாற்றப்பட தேவையான கொள்கைரீதியான ஆதாரவு வேண்டும்.

- அனைத்து விதமான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பூஞ்சாணக்கொல்லிகளையும் தடைசெய்யவேண்டும். விவசாயிகள் அனைவரும் உரம், பூச்சிக்கொல்லி மருந்து கம்பெனிகளின் கையில் சிக்கிவிடாமல் தடுத்து இயற்கை முறையிலான விவசாயத்தில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்த வேண்டும். இதன்மூலம் மண்வளம், நீர்நிலைகளை பாதுகாக்கப்படும், உற்பத்தி அதிகரிக்கும்.

- அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலையை நிர்ணயித்து ஆண்டு முழுவதும் கொள்முதல் நிலையங்களை திறந்து செயல்படுத்த வேண்டும்.

- விதைகள் மற்றும் செயற்கையாக மரபணுக்களை மாற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை உடனே தடைசெய்யவேன்டும். இதன் மூலம் விதைகளின் உரிமை பன்னாட்டு கம்பெனிகளுக்கு மாறுவதை தடைசெய்து பாரம்பரிய விதைகளை பாதுகாக்க கோருகிறோம். மத்திய மாநில அரசுகள் நமது விவசாயத்தில் பன்னாட்டு கம்பெனிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலையிடுவதை தடுத்து பாரம்பரிய விவசாயத்தின் பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டும்.

- விதைகள் மீது விவசாயிகள் கொண்டுள்ள பாரம்பரிய உரிமைகள் பன்னாட்டு நிறுவனங்களிடம் அறிவுசார் சொத்துரிமை என்ற பெயரில் களவு போகின்றது அடிப்படையில் நமது விவசாய பல்கலை கழகங்கள் பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து மரபணு மாற்ற விதை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபடக்கூடாது என வலியுறுத்துகிறோம்.

- விவசாயக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் விவசாயிகளுக்கு தேவை. ஆனால் அவற்றின் இன்றைய பன்னாட்டு கம்பெனிகளை சார்ந்திருக்கும், பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் சம்பந்தமில்லாத கம்பெனிகளுக்கு சாதகமான ஆய்வுகளில் ஈடுபடும் போக்கு தடுத்து நிறுத்தப்படவேண்டும். விவசாயிகளோடு இணைந்து கற்றுக்கொள்ளவும் ஆய்வு செய்யவும் அதைப்பகிர்ந்து கொள்ளவும் ஏற்ற மனப்பான்மை விவசாய கல்லூரிகளுக்கும், ஆய்வு நிறுவனங்களுக்கும் வரவேண்டும். இல்லையெனில் இன்றைய விவசாயிகள் விரோத விவசாய கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் வேண்டவே வேண்டாம்.

- வெளிநாட்டு கடன்கள் வாங்குவது போன்ற மிகமுக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கும்போது அது சம்பந்தமாக நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்து அமைப்புகளின் கிராம சபைகளில் விவாதிக்கப்பட வேண்டும்

- நாட்டின் ஒரு சிறிய சதவித மக்களின் நலன்களுக்காக பெருவாரியான மக்களின் நலன்களை புறக்கணிக்கும் உலகமயமாக்கல் கொள்கைகளில் இருந்து விடுபட்டு நமது தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களால் வலியுறுத்தப்பட்ட சுயசார்பு, கிராம தன்னிறைவு கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருளாதார கொள்கைகளை செயல்படுத்த முன்வர வேண்டும்.

குழு விவாதத்திற்கு பின், தொடர்செயல்பாடுகளை வழிநடத்துவதற்கென்று நிலைத்த வாழ்வாதாரத்திற்கான விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு உருவாக்கப்பட்டது. மாநில செயற்குழுவிற்கு மண்டலத்திற்கு மூவர் வீதம் (2 விவசாய தலைவர்கள் + 1 சமூக செயல்பாட்டாளர்) 9பேர் தேர்வு செய்யப்பட்டனர். செல்லத்துரை, ராமநாதபுரம் பாலசுப்பிரமணியம், காவேரி, அப்பாவு பாலான்டார், ஆணைக்கவுண்டர், சிவப்பிரகாஷம், ஜெயச்சந்திரன், ஜெகதீஷன், கோவிந்தராஜ் ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாவர். இவர்களை தவிர தேவையின் அடிப்படையில் நியமன உறுப்பினர்களை தேர்வு செய்வது என தீர்மானிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக இம்மாநில செயற்குழு கூடி மாநில கலந்தாலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை செயல்வடிவம் கொடுப்பது, சங்கத்தை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் என தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக வட மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகேசன் நன்றியுறைக்கு பின் கூட்டம் 3 மணிக்கு நிறைவு பெற்றது.
ஆக்கம்:
மாரிராஜன்.தி, மாநில ஒருங்கிணைப்பாளர்,
நிலைத்தவாழ்வாதாரத்திற்கான கூட்டுசெயல்பாடு

No comments: