கலந்தாய்விற்கான பின்னணி:
இதுவரை தமிழக அரசுகளால் கடந்த 1995களில் இருந்து உலக மயமாக்கல் கொள்கைகளுக்கு ஏற்ப தமிழக அரசின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் நீர் நிர்வாகத்தை மேற்கொண்டு வரும் அரசின் பொதுப்பணித்துறை உலக வங்கி கொள்கைகளுக்குகேற்ப மாற்றியமைக்க தமிழ்நாடு நீர்வள ஆதார தொகுப்பு திட்டம், நீரியல் திட்டங்கள், தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் என்ற பெயர்களில் தொடர்ச்சியாய் கடன்கொடுக்கப்படுகின்றன. இக்கடன்களின் முக்கிய நோக்கம் நீரை வணிகமயமாக்குவது, அதற்கான அமைப்புகள், கொள்கைகளை உருவாக்குவது ஆகும். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டன.
ஆரம்ப கட்ட பணிகளின் ஒரு முக்கிய திட்டம் தமிழக அரசினால் மேற்கொள்ளப்பட்ட அனுமா நதி துணைவடிநிலப்பகுதி மாதிரி திட்டம் ஆகும். இதனை உலகவங்கி தெற்காசியவிலேயே வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு அப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தை நல்லநிலைமைக்கு உயர்த்தியுள்ளது என தன்னுடைய அறிக்கைகளில் நற்சான்று அளித்துள்ளது. ஆனால் நடைமுறையில் இத்திட்டம் பற்றிய ஜாசூல் ஆய்வில் கிடைத்த தரவுகள் அதிர்ச்சி அளிக்க கூடிய இருந்தது. ஒட்டுமொத்தமாய் தண்ணீரை, விவசாய முறைகளை, உணவு உற்பத்தியை சீர்குலைக்ககூடிய முறையில் இருந்ததை காண முடிந்தது. (ஆய்வறிக்கை இணைக்கப்பட்டுள்ளது).
இந்த அனுமா நதி திட்டம் இன்று தமிழக அளவில் நீர்வள நிலவள ஆதார திட்டம் என்ற பெயரில் 63 துணைவடிநிலப்பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்டு கடந்த 2007ல் இருந்து பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் நடைபெறும் விதம் அதன் செயல்பாடுகளை ஜாசூல் அமைப்பின் மாவட்ட குழுக்கள் கண்காணித்து வருகின்றன. இதுவரை கிடைக்கப்பெற்ற அனுபவங்களை அடிப்படையாக கொண்டு தமிழக அளவில் நீர்வள நில வள திட்டம் செயல்படுத்தப்படும் 63 துணை வடிநிலப்பகுதிகளிலும் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவது, அதற்கான ஆயத்தகட்ட பணிகளில் ஈடுபடும் பொருட்டு விழப்புரம், பெரம்பலூர், மதுரையை மையப்படுத்திய மண்டல அளவிலான விவசாயிகளுக்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்வது என ஜாசூல் மாநில குழு முடிவு செய்தது.
கலந்தாய்வின் நோக்கம்:
உலக வங்கியின் கடனுதவி அல்லது நிதியுதவியின் கீழ் நடத்தப்படும் திட்டங்கள் நீர் மீதான சமுதாய உரிமையை எவ்வாறு தனியார்மயமாக்குகின்றன, அதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகள் என்ன?
உலக வங்கி கடனுதவியின் கீழ் துவங்கப்பட்டுள்ள தமிழக நீர்வள நிலவள திட்டத்தின் நோக்கம், நடைமுறைப்படுத்தப்படும் விதம், எங்கெங்கு செயல்படுத்தப்பட உள்ளது?
மத்திய, மாநில அரசு, உலகவங்கி, பன்னாட்டு நிறுவனங்களின் தண்ணீர் தனியார் மயமாக்கல் முயற்சிகளை எவ்வாறு எதிர்கொள்வது?
கலந்தாய்வு விபரம்:
| தென்மண்டலம் | மத்திய மண்டலம் | வடமண்டலம் |
நாள் | 16, 17 மே மாதம் 2008 | 21, 22 டிசம்பர் மாதம் 2008 | 10, 11 அக்டோபர் மாதம் 2008 | 12, 13 அக்டோபர் மாதம் 2008 |
இடம் | பீல் இயற்கை விவசாய பண்ணை, சின்னசாக்கிளிபட்டி, மதுரை | இட்பா மையம், பெரம்பலூர் | கவசம் தொண்டு நிறுவனம் பயிற்சி மையம், விலுப்புரம் | செம்மகளீர் மையம், திருப்பத்தூர் |
பங்கேற்பாளர்கள்# | 57 | 43 | 28 | 22 |
பங்கேற்பாளர்கள்#:
தமிழ்நாடு நீர்வள, நிலவள செயல்படுத்தப்படுகின்ற 63 துணைவடிநிலப்பகுதிகளை சார்ந்த விவசாய பிரதிநிதிகள், நீரிணை பயன்படுத்துவோர் சங்க பிரதிநிதிகள், ஆயக்கட்டுதாரர் சங்க பிரதிநிதிகள், தொண்டு நிறுவனபிரதிநிதிகள்,
பேசப்பட்ட விசயங்களை பற்றி அறிய தென் மண்டல நிகழ்வுகளின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
முதல் நிகழ்வுகள் (16/05/2008):
தொடக்க நிகழ்வாக திருமதி. சாந்தி, தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் அவர்களின் வரவேற்புறையுடன் பயிற்சி 11.30 மணிக்கு துவங்கியது. அதனை தொடர்ந்து திரு. மாரிராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்கள் பயிற்சியின் நோக்கம், இரண்டு நாள் அமர்வுகளில் விவாதிக்கப்பட உள்ள தலைப்புகள் பற்றி விளக்கினர்.
முதல் அமர்வுகள்: கிராமப்புற வாழ்வாதாரங்களும் உலகமயமாக்கலும் - திரு. ஒய். டேவிட், மாநில அமைப்பாளர், ஜாசூல்
திரு. ஒய். டேவிட், மாநில அமைப்பாளர் அவர்கள் தன்னுடைய உரையில் உலகமயமாக்கலின் வரலாறு, அதன் புதிய தாரளவாத தத்துவம், உலகமயமாக்கலின் கீழ் இந்தியா, தமிழ்நாடு, மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களான நீர், நிலம், விவசாயம், கால்நடைகள், காடுகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்கள் மற்றும் விளைவுகள், இதற்கான மக்களின் மாற்றுகள், மாற்றுகளை முன்னெடுத்து செல்வதில் ஒருங்கிணைந்து செயல்படவேண்டியதன் அவசியம் பற்றி விளக்கினார்.
இரண்டாம் அமர்வு: அனுமா நதி மாதிரி திட்டம் - திரு. செல்லத்துரை, பஞ்சாயத்து தலைவர் மற்றும் நீரிணை பயன்படுத்துவோர் சங்க தலைவர்
மதிய உணவிற்கு பின்பு துவங்கிய இரண்டாம் அமர்வில் திரு. செல்லத்துரை அவர்கள் தங்கள் பகுதியில் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என்றும் தேவையில்லாத, அப்பகுதி சூழ்நிலைக்கு பொருத்தமில்லாத பல திட்டக்கூறுகளால் பணம் வீணடிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். திட்டமிடல் மக்களிடம் இருந்து செய்யப்படவேண்டும் என்றும் அதனை செயல்படுத்தும்போது அதனை உண்மையிலேயே கண்காணிக்க அந்தந்த சங்கங்களுக்கு அதிகாரம் தரப்படவேண்டும் என்றும் வழியுறுத்தினார். எல்லாவற்றிற்கும் மேலாக விவசாய விலைபொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை கொடுக்கும் கொள்கை இருந்தால் விவசாயிகளுக்கு இது போன்ற வெளிநாட்டு கடன் திட்டங்களுக்கு வேலையே இல்லை என்றார். தாங்கள் பகுதி விவசாயிகள் ஏமாற்றப்பட்டது போல் இல்லாமல் மற்ற பகுதி விவசாயிகள் விழிப்போடு இருப்பது அவசியம் என்றார். மேலான விவரங்களுக்கு ஜாசுல் அமைப்பின் அனுமா நதி திட்டம் குறித்த ஆய்வறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் அமர்வு: தமிழக நீர்மேலாண்மை திட்டங்களும் உலகவங்கியின் உள்நோக்கங்களும் - திரு. மாரிராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர், ஜாசூல்
மாலை 4.30 மணிக்கு துவங்கிய மாலைநேர அமர்வில் திரு. மாரிராஜன் அவர்கள் கடந்த 20 வருடங்களாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் உலக வங்கியின் நீரியல் திட்டங்களின் நோக்கம், கடனுக்கான நிபந்தனைகள், துறைசார்ந்த சீர்திருத்தங்களினால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சட்டங்கள், மற்றும் அமைப்புகள் பற்றி விளக்கினார். முடிவாக பங்கேற்பாலர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார். மூன்றாம் அமர்வு சரியாக மழையின் இடையூறுகளுக்கிடையே இரவு 8 மணிக்கு நிறைவு பெற்றது.
நான்காம் அமர்வு: குழு விவாதம்
இரவு உணவு இடைவேளைக்கு பின்னர் மாவட்ட வரியாக பங்கேற்பாளர்கள் இனைந்து தங்கள் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகின்ற, செயல்படுத்தப்பட உள்ள துணைவடிநிலப்பகுதிகளில் உள்ள பிரச்சினைகள், விவசாயிகளை ஒருங்கிணைப்பது சம்பந்தமாக குழு விவாதம் செய்தனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் (17/05/2008):
விழிப்புணர்வு பாடல்களுடன் துவங்கிய இரண்டாம் நாள் அமர்வுகளின் துவக்கமாக முதல் நாள் குழு விவாத அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
ஐந்தாம் அமர்வு: தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டம் - திரு. பாலசுப்பிரமணி, பொறியாளர் மற்றும் ஒன்றிய கவுன்ஸ்லர், மானமதுரை, சிவகங்கை.
திரு. பாலசுப்பிரமணி அவர்கள் பேசும்போது ஒட்டுமொத்தமான திட்டப்பின்னனி, திட்டத்தின் கூறுகள், இணைந்து செயல்படுகின்ற ஒன்பது துறைகளின் தனித்தனியான பணிகள், அவை நடைமுறைப்படுத்தும்போது உள்ள பிரச்சனைகள், அரசு இயந்திரத்தின் இயலாமை, திட்டம் பற்றி தகவல் பெறுவதில் உள்ள இடர்பாடுகள் பற்றி விளக்கமளித்தார். தாங்கள் பகுதியில் (கோட்டகொரையாறு) கடந்த ஒரு வருடமாக திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் எந்தவொரு வேலையும் முழுமையாக நடைபெறாமலேயே நன்றாக நடைபெறுவதாக பொய் அறிக்கைகள் கொடுப்பது என களத்தில் உள்ள நேரடிப்பிரச்சனைகள் பற்றியும் விவசாயிகளின் நேரடி கேள்விகளுக்கு விளக்கமும் அளித்தார். திட்ட கூறுகள் பற்றிய விளக்கம் இணைக்கப்பட்டுள்ளது. தேனீர் இடைவேளைக்கு பிந்தைய நேரத்தில் திரு. ஆலாத்தூர், கிருதுமால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் அவர்கள் கிருதுமால் பாசன விவசாயிகள் கடந்த அரை நூற்றாண்டுகளாக சந்தித்து வரும் பிரச்சனைகள் மற்றும் முல்லை பெரியார் அணைக்கட்டு பிரச்சனை பற்றிய தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
ஆறாம் அமர்வு: திட்டமிடல்
இதணை தொடர்ந்து ஆறாவது மற்றும் இறுதி அமர்வினை திரு. ஒய். டேவிட் மற்றும் திரு. ஜான்சன், மாநில குழு உறுப்பினர், ஜாசூல், காஞ்சிபுரம் ஆகியோர் வழிநடத்தினர். இதில் உலக வங்கியின் தேவை, அதன் அமைப்புமுறை, கடன்கள், நிபந்தனைகள், இதுவரை ஆற்றியுள்ள பணிகளை பற்றிய உள்ளூர் மக்களின் மதிப்பீடுகள் விவாதிக்கப்பட்டது. அதனடிப்படையில் கீழ் கண்ட கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அமைப்புகள் மத்தியில் எழுப்புவது தீர்மானிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசிற்கான கோரிக்கைகள்:
1. வெளிநாட்டு கடன்கள் வாங்குவது போன்ற மிகமுக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கும்போது அதுசம்பந்தமாக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும்
2. அதோடுமட்டுமல்லாமல் மக்கள் மன்றத்தில் இது சம்பந்தமான விவாதங்களுக்கு ஏற்பாடு செய்து விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும்
3. விவசாயிகள் - விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கண்டிப்பாக இடம்பெறல் வேண்டும்
4. கிராமசபை கூட்டங்களிலும் விவாதிக்கப்படவேண்டும்
5. அனுமாநதி மாடல் திட்டம் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்
துணைவடிநிலப்பகுதிவாரியான கோரிக்கைகள்:
6. ஒவ்வொரு துணைவடிநில பகுதிகளிலும் அந்தந்த பகுதிகளுக்கேற்றவாறு மக்களோடு உட்கார்ந்து கலந்து பேசி திட்டம் தயார் செய்து அதை செயல்படுத்த வேண்டும். திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் பகுதிவாரியாக மக்களுக்கு முன்தேதியே குறிப்பிட்டு கால அவகாசம் அளித்து முழுநாள் கூட்டமாக நடைபெற்று அதனடிப்படையில் திட்டம் தயாரிக்கவேன்டும்.
7. பாசன சங்கங்களை உருவாக்கி, பயிற்சி நடத்தி, திட்டம் குறித்த முழு விபரம் தெரிவித்து அதன் பின்பு தான் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்.
நடந்து முடிந்த வேலைகளை பற்றி பாசன விவசாயிகள் சங்கம், கிராம சபைகளில் வைத்து ஒப்புதல் பெற வேன்டும்.
8. ஒட்டுமொத்தமாக நீர் விநியோகம் வருங்காலத்தில் குடிநீர், விவசாயம், மாசுபடுத்தாத தொழிற்சாலைகளுக்கு என முன்னுரிமைப்படுத்த வேண்டும்.
9. பணப்பயிர்களுக்கு முன்னுரிமை வழங்காமல் மாற்றாக இயற்கை வழியில் உற்பத்தி செய்யும் உணவு பொருள் உற்பத்தி செய்யும் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.
10. காடுகள், கால்நடைகள்மேம்பாட்டிற்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.
11. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் போர்கால அடிப்படையில் அகற்றப்படவேன்டும்.
உலக வங்கிக்கான கோரிக்கைகள்:
1. உள்நாட்டு நிர்வாகத்திலும், கோட்பாடுகளிலும், அந்த நாட்டு இறையான்மையிலும் உலக வங்கி தலையிட கூடாது.
2. உலக வங்கி கடன் கொடுக்கும்போது உள்கட்டமைப்பு சீர்திருத்தங்களை வலியுறுத்த கூடாது.
3. ஆள்குறைப்பு என்ற பெயரில் நீர் மேலாண்மையில் உள்ள கடைநிலை ஊழியர்களை வீ.ஆர்.எஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்பும்போக்கு கூடாது.
4. மின்சார வாரியத்தை சீர்திருத்தம் என்ற பெயரில் மாற்றியமைக்க கூடாது.
5. தண்ணீர் வரி விதிக்க அரசுகளை நெருக்க கூடாது.
இந்திய அரசிற்கான கோரிக்கைகள்:
1. நாட்டின் ஒரு சிறிய சதவித மக்களின் நலன்களுக்காக பெருவாரியான மக்களின் நலன்களை புறக்கணிக்கும் உலகமயமாக்கல் கொள்கைகளில் இருந்து விடுபட்டு நமது தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களால் வலியுறுத்தப்பட்ட சுயசார்பு, கிராம தன்னிரைவு கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருளாதார கொள்கைகளை செயல்படுத்த முன்வர வேண்டும்.
உடனடி செயல்பாடுகள்:
இக்கோரிக்கைகளை மையப்படுத்திய செயல்பாடுகளில் ஈடுபடுவதன் அவசியம் பற்றிய விவாதங்கள் உணவு இடைவேளைக்கு பிந்தைய அமர்வில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கீழ்கண்ட வேலைகளில் உடனடியாக ஈடுபடுவது என தீர்மாணிக்கப்பட்டது.
ஒவ்வொரு துணைவடிநில பகுதி வாரியாக கமிட்டிகளை உருவாக்க வேண்டும்.
மாநில அளவில் குறைந்தபட்சம் 40 லிருந்து 50பேரை முழுமையாய் பயிற்றுவித்தல்.
கிராம அளவில் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான விவசாயிகள் சங்கம் (Sustainable Livelihood Farmar Association (SLFA) – அந்தந்த கிராமங்களின் பெயர்களில் உருவாக்கவேண்டும்.
ஜாசூல் மாவட்ட அமைப்புகள் அவர்களின் துணை வடிநிலபகுதிகளில் அந்தந்த இடத்தின் சூழ்நிலையை பொருத்து இந்த அமைப்பினை உருவாக்கும் பொறுப்பெடுக்கவேண்டும்.
இதனை தொடர்ந்து கிராம அளவில் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான விவசாயிகள் சங்கம் (SLFA) அமைப்பதற்கான தென் மண்டல ஆலோசனை குழு அமைக்கப்பட்டது.
ஆக்கம்:
மாரிராஜன்.தி, மாநில ஒருங்கிணைப்பாளர், ஜாசூல் - தமிழ்நாடு